பக்கம்:இன்னொரு உரிமை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் புறாக்கள்113

என்பதுபோல் கையாட்டினாள். ஆனால், அதுவோ இன்றைக்கு அவங்ககூட போகப்போறேன் என்பதுபோல் பறந்தது. அவள் எவ்வளவு கூப்பிட்டும் அவளை எட்டிப் பார்த்ததே தவிர திரும்பவில்லை அவளும் அலட்டிக்கவில்லை. முந்தாநாள் கூட ஒரு கிலோ மீட்டர் போய்த் திரும்பிவிட்டது. இன்றைக்கு இரண்டு கிலோமீட்டர் வேண்டுமானால் போகலாம்.

பின்தங்கிப்போன அந்தப் புறாச் சிறுமி, பெரியவர்களோடு இணையாகப் பறப்பதற்கு இறைக்கைகளை மாறி மாறி அடித்து இறுதியில் அவற்றுடன் சேர்ந்துகொண்டது. ஐந்து கிலோ மீட்டர் பறந்ததும், லேசாய் மூச்சு வாங்கியது. ஆனாலும் கிழடுகளுக்கு இளக்காரமாகிவிடும் என்பதற்காக அது எட்டிப் பறந்தது. மரங்களுக்கு மேலே ஆகாயத்தின் அந்தரத்தில் கீழே தெரிந்த அத்தனை மனித உருவங்களும் அவளுக்குச் சிறியதாய்ப்போன ஒரு சந்தோஷம். பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தாண்டியதும், பெரிய புறாக்கள் ஆங்காங்கே உள்ள மரங்களில் உட்கார்ந்தன. ஆனால், இந்தப் புறாச் சிறுக்கி தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டும் என்பதுபோல் மேலும் பறந்துகொண்டே பாய்ந்தது. இறுதியில் கிளைகளில் இருந்த அந்தப் புறாக்கள் கண்படும் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் இறங்கி ஒரு நாணல் புதர்மேல் உட்கார்ந்தது. அங்குமிங்குமாய் நோட்டம்விட்டது.

எதிரே உள்ள மூங்கில் புதரில் உட்கார்ந்திருந்த இன்னொரு இளம் புறா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப்போல் ஆகாயத்தில் பாய்ந்து கும்மாளம்மாவின் புறாப் பக்கம் வந்து உட்கார்ந்தது. அந்தப் புறாவும் அங்கே போய் இன்னொரு விழுதில் உட்கார்ந்து இதையே முறைத்துப் பார்த்தது. இதைத் தாங்கமுடியாத கும்மாளம்மாவின் புறா மீண்டும் புல்வெளியில் வந்து குதித்தது.

சி.—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/122&oldid=1368793" இலிருந்து மீள்விக்கப்பட்டது