பக்கம்:இன்னொரு உரிமை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகக் காத்திருக்கும் பெண் மின்மினிப் பூச்சிகள் கண்ணில் பட்டன. இந்தப் பாவப்பட்ட மின்மினிப் பெண்களுக்கு பறக்கும் சக்தி கிடையாது. ஆகையால் உடம்பிலே ஒளி சிந்தி ஆண்களை வரவழைக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட அவசியம் தங்களுக்கு இல்லை என்பதுபோல் இந்தப் புறாச்ஜோடி பெருமையோடு தலைகளை ஆட்டிக்கொண்டன. அருகே ஒரு புகைவண்டிப்புழு, தரையிலுள்ள சிவப்புப் புள்ளிகளில் மரக்குச்சி ஒன்று விழுந்ததால், உடம்பெல்லாம் பச்சை நிறமாக ஒட்டிக்கொண்டிருந்தது. இந்த சைவப்பிராணிகள் அதை எதுவும் செய்யவில்லை. ஆனாலும்—

கும்மாளம்மா புறா, அந்த இடத்தை நோட்டமிட்டது. கிராமத்துக்காரன் நகரத்துக்கு வந்தது போன்ற திகில். வாகை மரங்கள், பூவரசுகளுடன் குலவிக்கொண்டிருந்தன. செடியாகவும் மரமாகவும் இல்லாத வேலிக்காத்தான்கள் வெள்ளை, சிவப்பு மலர் முகங்களைக் காட்டிக்கொண்டிருந்தன. பேருக்கு எதிர்மாறான நச்சுக்கொட்டைமரம், மெல்லிய கீரைகளை வெளிப்படுத்திக்கொண்டு தென்னை மரத்தோடு உரசிக்கொண்டிருந்தது. சின்னச் சின்ன பனைகள் முள்ளம்பன்றிகள் போல் சிலிர்த்துக்கொண்டு இருந்தன.

“ஆமா... என்ன அது?”

அருகே ஒரு பள்ளம். அங்கே தண்ணிர்க் காடு. வெளியே ஒரு பகுதியை விட்டுக்கொண்டிருந்ததால், சுத்தமாக இருப்பதுபோல் தெரிந்தது. அங்கே ஒரு பூனை ஒரு கல்லில் பதுங்கிக்கொண்டு முன்காலில் ஒன்றை எடுத்து தண்ணிருக்குள் நீட்டுகிறது. திடீரென்று அதை மேலே தூக்கிக் காலில் கவ்விய மீனை பாறையில் மோதி அங்குமிங்குமாகச் சிதறடித்துபிறகு வாய்க்கு கொண்டுபோகிறது.

இதைப் பார்க்கப் பயந்த கும்மாளம்மாவின் புறா, நடுங்கிவிட்டது. அதை மறைப்பதற்காக ஆகாயத்தைப் பார்த்தது. அங்கே ஈச்சமரத்தில் தம்புராமாதிரி ஒரு கூடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/124&oldid=1368845" இலிருந்து மீள்விக்கப்பட்டது