பக்கம்:இன்னொரு உரிமை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116சு. சமுத்திரம்

மேலே ஒரு பறவை—அதுதான்—நல்லாப்பாடுமே அது! ஒரு கிளையில் உட்கார்ந்திருக்கிறது. கூட்டிலிருந்து, ஆகாய விமானம் மாதிரி உள்ள வால் குருவி வெளியே பறந்ததும் இந்தக் குயிலு அந்தக் கூட்டுக்குள் போகிறது. ஒரு முட்டையை வாயால் கவ்விக் கீழே போட்டு உடைக்கிறது. பிறகு பின்பக்கமாகத் திரும்பி உடம்பின் பின்பகுதியை அந்த கூட்டுக்குள் கொண்டுபோகிறது. அப்புறம் பறக்கிறது. இப்படியா அட்டூழியம் செய்யறது? அதென்ன?... அடுத்தவள் வீட்டுக்குள்ள போயி... அவ முட்டையை ஒடச்சிட்டு, தன் முட்டையைப் போடறது.

கும்மாளம்மாவின் புறாவிற்கு வெறுப்பு வந்துவிட்டது. அதோடு அவளின் ஞாபகமும் வந்துவிட்டது. அதற்கு வீட்டிற்குப் போகவேண்டும்போல் தோன்றியது. அருகே அணைத்துக்கொண்டிருந்த ஆசைக் காதலனை ஏறிட்டுப் பார்த்துக் காலால் இடறியது. “நா போகப் போறேனாக்கும்.”

முன்கால்களை வளைத்து, பின்கால்களை அது லேசாகத் தூக்கியபோது, அந்த ஆண்புறா, அது போக வேண்டாம் என்பதுபோல் அதன் முன்னால் போய் நின்று தன் கழுத்தைக் கொடுத்து அலகை நிமிர்த்தியது. இங்கேயே குடித்தனம் செய்யலாம் என்பதுபோல் மீண்டும் ‘கெக்கெக்’ என்று சத்தம் போட்டு அந்தப் பெண்புறாவிற்கு இன்ப அதிர்வுகளைக் கொடுத்தது. தாய்க்காரி கும்மாளம்மாவை தனது ஜோடியோடு காட்ட வேண்டும் என்று அந்தப் புறாச் சிறுமிக்கு ஒரு ஆசை. நீயும் வாயேன் என்பதுபோல் ‘கெக்கெக்’ புறாவிற்கு இணையாக ஒரு சத்தம் போட்டது. ஆனாலும், அது தன்னோடு வராது என்று புரிந்து கொண்டதுபோல் நான்கடி தாவி, அதை திரும்பிப் பார்த்தது. பிறகு ஜெட் விமானம்போல் நேராக ஆகாயத்தில் எம்பிப் பறந்தது. மீண்டும் மனம் கேட்காமல் திரும்பி வந்து அந்த ஆகாயத்தையே ஏக்கமாகப் பார்த்த காதலனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/125&oldid=1368864" இலிருந்து மீள்விக்கப்பட்டது