பக்கம்:இன்னொரு உரிமை.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122சு. சமுத்திரம்

பட்சம் அப்போது இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. கலைத்திருந்த போர்வையை கலக்கி, உடல் முழுதும் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்தான். காலிங்பெல் சத்தம் கேட்கவில்லை; ஆறுதலாகவும் அனாவசியமாகவும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீண்டும் மணியோசை.

ஆத்திரத்தோடு எழுந்தான். யாராக இருந்தாலும் ‘ஒனக்கு மூளை இருக்கா... அப்படியிருந்தால் நீயும் இப்போ தூங்குவே’ என்று சொல்லிவிடுவது என்று உறுதியுடன், தன் தூக்கத்தை யாராலும் தடுக்கமுடியாது என்ற தைரியத்தில், போர்வையை மடித்து வைக்காமல் பனியனை சட்டையால் மறைக்காமல், வேட்டியை லுங்கியால் மாற்றாமல், தூக்கக் கலக்கம் போய்விடலாகாது என்பதற்காக முகத்தை அலம்பாமல் எரிச்சலோடு கதவைத் திறந்தான். ஆள் எதுவும் உள்ளே வரமுடியாத அரையடி இடைவெளியில் கதவை வைத்துக்கொண்டே “யாரது” என்று அதட்டினான்.

அவன் கண்ணுக்கு முதலில் ஒரு சிவந்த கரமும், அப்புறம் வளையல் பதித்த சதை வட்டமும் அப்புறம் ஒரு நீலப்புடவையும் தோன்றியது. கதவு அளவுக்குமீறிய அகலத்தோடு பிரிந்தது.

வந்தவள் அவனை எதிர்பாராததுபோல் திடுக்கிட்ட குரலில் திரும்பிப் போகப்போகிறவள்போல் படபடப்போடு பேசினாள்.

“மிஸ்ஸஸ் சேகர் இல்லிங்களா...”

சேகர் யோசிக்காமல் பதிலளித்தான்.

“பிளீஸ்... கம் இன் பஸ்ட்...”

“மிஸ்ஸஸ் சேகர் இல்லிங்களா...”

மிஸ்ஸஸ் சேகர் இல்லை என்று சொல்லாமலும், இருக்கிறாள் என்று பேசாமலும், பெட்ரூமைப் பார்த்தான். உடனே அவள் இருக்கிறாள் என்று அனுமானித்தவள்போல உள்ளே வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/131&oldid=1388261" இலிருந்து மீள்விக்கப்பட்டது