பக்கம்:இன்னொரு உரிமை.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு123

“எனக்கு யாரையும் நிற்க வைத்துப் பேசுறது பிடிக்காது... பிளீஸ் சிட்டவுன்” என்று புன்னகை பீடிகையோடு இன்மொழிந்தான் சேகர்.

அவள் ஷோபாவில் உட்கார்ந்தாள். சேகர் உள்ளே போனான். மனைவியை எழுப்பப் போகிறான் என்று நினைத்தபடி, அவள் வரவேற்பு அறையில் மாட்டியிருந்த புத்தருடைய படத்தையும், திராட்சைக் கொத்துபோல் திரண்டிருந்த கடல்பாசிக் குவியலையும், பல்வேறு வண்ணங்களில் எளிமையான கம்பீரத்தால் ஆங்காங்கே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த கடல் சிப்பிகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டு, “ஹலோ மிஸ்ஸஸ். சேகர்” என்று கூவப்போனவள், கோழியைக் காணும் சேவல் தன் இரு இறக்கைகளையும் அடிப்பதுபோல், சேகர் சட்டையின் இருபுறத்தையும் இழுத்து இழுத்துவிட்டுக் கொண்டே அவள் முன்னால் தோன்றினான்.

“மிஸஸ் சேகர் இல்லிங்களா?”

“என்ன சொன்னிங்க?”

“ஒங்க ஒய்ப் இல்லிங்களா?”

“சொந்தக்காரங்களைப் பாத்துட்டு இதோ வரேன்னு போனாள். இன்னிக்குத்தான் இதோ என்கிறதுக்கு எவ்வளவு நேரமுன்னு அவள் மூலம் தெரிஞ்சிக்கணும்...”

அவள் பயப்பட்டவள்போல் புன்னகைத்தாள்.

“சரி, அப்படின்னா... நான் அப்புறமா வாரேன்.”

“ஒரு டென் மினிட்சில வந்துடுவாள்... இருந்துட்டு...”

“பரவாயில்ல... நான் பக்கத்துலதான் இருக்கேன்... அப்புறமாய் பார்த்துக்கலாம்...”

“நீங்க மிஸஸ் பாஸ்கரன்தானே!”

அவள் அவனை வியப்போடு பார்த்துவிட்டு தலையாட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/132&oldid=1388265" இலிருந்து மீள்விக்கப்பட்டது