பக்கம்:இன்னொரு உரிமை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரம்பு மீறிகள் 147

அர்த்தம் தெரியாமல் எந்தப் புனித வரியையும் வாசிக்கிறது அந்தப் புனிதத்தையே அவமதிக்கிறது மாதிரி. கையைத் தானே பிடித்தான்னு, அதுக்குப் பின்னால இருக்கிற ஆணவத்தை, அகந்தையைத் தெரியாமல் இருக்கீங்களே, அதேமாதிரிதான்!”

இசக்கியா பிள்ளையின் கண்ணீர் நாமார்க்கும் குடியல்லோம் வாசகங்களை நனைத்தது. அந்தப் பாடலை, அப்பர் பிரான் பாடிய சூழலை எண்ணிப் பார்த்தார். அப்பரே அங்கே வந்து... அவரையே ஒரு எதிர் பக்தியாளனாய், தன்னைக் கடலில் கல் கட்டித் தூக்கிப்போட்ட அந்த மன்னனின் மறுவுருவமாய்ப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்தப் பாடலின் மெய்யான தாத்பரியம், அவர் இதுவரை யந்திரகதியில் ஓதிவரும் மந்திரங்களுக்குப் புதிய அர்த்தத் தைக் கொடுத்தது. புத்திர்பலம், யசோர் தைரியம், நிர்ப்பயத்துவம்... ஆம், பயம்தான்... பயப்பட வேண்டும். கொத்து திரி சூலிதிரி குலச ஓங்காரி... ஆங்காரி... ஓங்காரி போன்ற சொற்கள், புதுப்பொருளைக் கொடுத்த சூலாயுதம் என்பது பாலாபிஷேகம் செய்வதற்காக மட்டுமல்ல, நாமார்க்கும் என்பது ஓதுவதற்கும், உச்சரிப்பதற்கும் மட்டும் அப்பர் பெருமான் ஆக்கவில்லை.

இசக்கியா பிள்ளை மகளையே ஒரு துர்க்கையாக அனுமானித்தார். தன்னுள்ளே ஒரு கடல் பொங்குவதைக் கண்டார். அதிலே திரிசூலமும், உடுக்கும் எழுவதைப் பார்த்தார். நாமார்க்கும் குடியல்லோம்... ஆமாம்... அஞ்சி ஒடுங்கி வாயில்லாப்பூச்சியாய் இருப்பது அப்பர் பிரானை அவமதிப்பதற்கு ஒப்பாகும். சட்டம் என்ற கல்லைக் கட்டி, நீதிமன்றம் என்ற கடலில் போட்டாலும், நாமார்க்கும் குடியல்லோம்.

இசக்கியா பிள்ளை கற்பூரத்தை ஏற்றினார். ஆறுமுகமாய்ச் சுடர்விட்ட ஜோதியை அங்குமிங்குமாய் ஆட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/156&oldid=1369562" இலிருந்து மீள்விக்கப்பட்டது