பக்கம்:இன்னொரு உரிமை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுமைதாங்கிகள்151

அவளைப் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே போனான். அதே வேகத்தில் திரும்பிவந்து அவளிடம், “சொல்லிட்டேன்” என்று சொன்னான். சுலோச்சனா அவள் கூப்பிடப் போகிற ஒரு நிமிட கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்வதுபோல், அவசர அவசரமாகக் கண்பக்கம் விழுந்த முடியை தலைப்பக்கம் கொண்டுபோனாள். கண்களைத் துடைத்துக்கொண்டே வாசல்பக்கம் வந்து நின்றாள். அவள் எதிர்பார்த்ததுபோல் கீதா வெளியே வந்து, “என்ன அண்ணி, இங்கேயே நிக்கறிங்க?” என்று கேட்க வரவில்லை.

சுலோச்சனா காத்து நின்றாள்... காத்து நின்றாள்... கடிகாரம் அரைவட்டம் அடிக்கும் அளவிற்கு காத்து நின்றாள். கீதாவோ கூப்பிடவில்லை. உள்ளே இருந்த சத்தமோ ஓயவில்லை. ராகுகாலம் வருவதற்குள், வீட்டுக்குப் போயாக வேண்டும். இப்படி நின்றால், ராகுகாலம் போய்ச் சேர்ந்து, எமகண்டமும் வந்துவிடும். ஆபத்துக்குப் பாவமில்லை. அவசரத்திற்கு இங்கிதங்கள் தேவையில்லை.

சுலோச்சனா, கதவைத் திறந்துகொண்டு நிதானித்துப் பார்த்தபடி, உள்ளே போனாள். சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கீதா ஒரு வார்த்தையைப் பாதியில் முடித்தபடி அவளைப் பார்த்தபோது எதிர் இருக்கைகளில் இருந்த மூவர் அவளை நோயாளியைப் பார்ப்பதுபோல் நோகடித்துப் பார்த்தனர். கீதா கேட்டாள்:

“கொஞ்சம் வெளியில் இருங்களேன் கூப்பிடுறேன்.” - இன்டர்நேசனல் கான்ப்ரன்ஸ்பற்றிப் பேசும்போது டொமஸ்டிக் பெண் வந்துவிட்டதில் லேசான கோபம். சுலோச்சனா தயங்கியபடியே சொன்னாள்:

“நேரம் இல்லம்மா. அதோட நல்ல சமாசாரத்த நாலுபேர் முன்னால சொல்லறதுல தப்பு இல்ல.”

“விடமாட்டீங்களே, சரி சொல்லுங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/160&oldid=1368515" இலிருந்து மீள்விக்கப்பட்டது