பக்கம்:இன்னொரு உரிமை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154சு. சமுத்திரம்

தண்டித்துக் கொள்வதுபோல் உதடுகளை கடுமையாகக் கடித்தாள். எதைச் சொல்லிக் காட்டினாலும் ஒருவருக்குச் செய்யும் உதவியை சொல்லிக் காட்டக்கூடாது, மனசுக்குள்ள கூடப் பேசிக்கக்கூடாது.

அவள் காட்டிய வீட்டின் முன்னால் ஆட்டோ நின்ற போது அவள் அவசர அவசரமாக இறங்கினாள். எதிரே வீட்டுக்கும் வாசலுக்குமாய் துடித்துக் கொண்டிருந்த ‘அவர்’ ஓடிவந்தார். அந்த வயதிலும் அட்டகாசமான கம்பீரம்.

“ஏன் இவ்வளவு லேட்டு? பிள்ளை வீட்டிலேர்ந்து வந்துட்டாங்க.”

“ஐய்யய்யோ... சரி சரி... ஆட்டோவுக்குப் பணம் கொடுங்க, நான் உள்ளே போய் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன்!”

சுலோச்சனா அவசர அவசரமாக உள்ளே வந்தாள். நான்கைந்து போர்ஷன்களைத் தாண்டி, இறுதியாக இருந்த இட வாசலுக்குள் நுழைந்தாள். ஆச்சரியத்தோடும், ஆனந்தத்தோடும் வட்டமிட்டுப் பார்த்தாள். ‘பிள்ளை நல்லாத்தான் இருக்கான். யோகாசன பயிற்சி செய்தது போன்ற உடம்பு. வெளுத்துப் போகாத சிவப்பு. அதோ அவன் அப்பாவும், அம்மாவும் இவனை உரிச்சுவச்சது மாதிரியே இருக்காங்க. அடடே... சுரேஷ் கூட வந்திருக்கானே!’

சுலோச்சனா அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வணக்கம் போட்டாள். பிறகு, “எப்போ சுரேஷ் வந்தே” என்று கேட்டபடியே பிள்ளையின் அப்பாவிடம், “இவன் என் பிரதர்-இன்-லா. பேராசிரியர் சுரேஷ், மைசூர் பல்கலைக் கழகத்துல காமர்ஸ் டிப்பார்ட்மெண்டில் ஹெட், மனோ வந்தாளா, சுரேஷ்!”

“லாட்ஜில் இருக்காள்.”

“என்னப்பா இது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/163&oldid=1368568" இலிருந்து மீள்விக்கப்பட்டது