பக்கம்:இன்னொரு உரிமை.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்போ இல்ல... அப்போ... 1954ம் வருஷம் ஜனவரி பொங்கல் நாளு. டில்லிக்குப் போயிட்டு மத்தியானமா வந்தீங்க. நான் காபியக் கொடுத்துக்கிட்டே "பாஸ்கர் எப்படி இருக்கார். பெண்டாட்டிய கிராமத்துல விட்டுட்டு டில்லில ஹோட்டலுல சாப்பிடுறாரே... உடம்பு இளைச் சிருக்குமேன்னு கேட்டேன். நீங்க என்ன சொன்னீங்க!"

"எனக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரலே!"

"எப்படி வராமப் போகும்? "என்னடி வந்ததும் வராததுமா அவனையே கேட்கிறே! இங்க இருக்கும்போது தான் கேட்டே! அங்கே போன பிறவுமான்னு கேட்கக் கூடாத குரலுல கேட்டிங்க. நீங்க அப்படிக் கேட்கும்போது நம்ம கண்ணப்பன் அப்... அப்னு உங்களப் பார்த்து தவழ்ந்து வாரான். ரெண்டாவது மகள் குழந்தைய தன் சடைய வச்சே செல்லமா அடிக்காள். உடனே மூத்தவள் தம்பிய தூக்கமுடியாமத் தூக்கிட்டு தங்கச்சிய அடிக்கப் போறாள். அப்போதான் நீங்க கேட்டது. ஒருத்தர அண்ணன்னு சொல்லாட்டா... அவரு அண்ணன்னு இல்லன்னு அர்த்தமா... இப்போ எந்த முகத்த வச்சுட்டு கூப்பிடுறீங்க!"

"அப்போ அவன் போட்ட லட்டருங்கள..."

"நான்தான் கிழிச்சேன்னு வச்சுக்குங்களேன்."

ராமநாதன் தாத்தா அதிர்ந்துபோனவர்போல், நிலை குத்திப் பார்த்தார். கால்களை ஒன்றின்மேல் ஒன்றாகத் தேய்த்தார். ஈரம் பட்ட மூக்குக் கண்ணாடியை துடைத்த படியே வெளியே வந்தார். அவரும் ஒரு குற்றவாளிதான்.

அந்தச் சம்பவம் அவருக்கு ஞாபகம் வரவில்லையா னாலும், அப்படிப்பட்ட ஒரு அரைகுறை எண்ணம் வந்தது நிசந்தான். அதிகமாகவும் இல்லை... அதிக நாளாகவும் இல்லை. ஆனால் பாட்டிக்கு...

பெண்ணுக்கு முதுமை உண்டு. ஆனால் பெண்மைக்கு ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/17&oldid=1369497" இலிருந்து மீள்விக்கப்பட்டது