பக்கம்:இன்னொரு உரிமை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164சு. சமுத்திரம்

கொண்டு அவர்களைச் சங்கடத்துடன் பார்த்தாள். அவள் சங்கடப் பார்வையால் சங்கடப்பட்ட, அவளது பெரியய்யா பேத்தி தன் அத்தைக்காரியைப் பார்த்து “பின்ன என்ன அத்த, நீ சினிமா... சினிமாவாகப் பாருன்னு சொல்லல. ஆடிக்கு ஒரு தடவ , அமாசைக்கு ஒரு தடவையாவது பாக் காண்டாமா... பாத்தா, இவளுவ இப்படி நாக்குமேல பல்லப்போட்டுப் பேசுவாளுவளா... உக்காரு” என்றாள்.

இந்தமாதிரி அந்தப் பெண்கள். சீனியம்மாவைக் கிண்டல் செய்வது வழக்கந்தான். அப்போதெல்லாம் ‘போங்கடி... புண்ணாக்கு மாடத்திகளா...’ என்று பதில் பேசும் சீனியம்மை அன்று ஏனோ வேறுவிதமாகவே பதிலளித்தாள்.

“ஆமாம்... இவளுவ சினிமாவுக்குக் கூப்புட்டாளுவ... நான் வரமாட்டேன்னுட்டேன்.”

“அப்படின்னா இன்னைக்கி போறோம்... வாறீயா?”

“எத்தனாவது ஆட்டத்துக்கு?”

“முதல் ஆட்டத்துக்கு.”

“ரெண்டாவது ஆட்டத்துக்குன்னா வரமுடியும். கண்ணுக்குட்டிக்கு புல்லை வெட்டிப் போட்டுட்டு வந்துடு வேன்...”

“நீ புல்லு மட்டுமா வெட்டுவ? வெட்டுன புல்ல தின்னு கூடப் பார்ப்ப...”

“எதுக்குடி எங்க அத்தைய மாடுன்னு குத்திக் காட்டுறிய? அத்த! நீ இதுக்காவது எங்ககூட சினிமாவுக்கு வரணும்!”

சீனியம்மை அப்படியும் சொல்லாமல், இப்படியும் பேசாமல், அவசர அவசரமாகக் காட்டுப் பக்கம் போனாள். “இவள... போயி கூப்பிட்ட பாரு” என்று ஒருத்தி மோவாயில் இடிக்க, மற்றொருத்தி தோளை மோவாயில் இடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/173&oldid=1368855" இலிருந்து மீள்விக்கப்பட்டது