பக்கம்:இன்னொரு உரிமை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166சு. சமுத்திரம்

என்பது மாதிரி கண்களால் பார்த்தபோது, கண்கொத்திப் பாம்பு போன்ற ஒருத்தி, “வார்படம் (அதாவது செய்திப் படம்) முடியட்டுமுன்னு மெதுவா நடந்தோம்... அப்படியும் இந்தச் சனியன் முடியல பாரு...” என்றாள். உடனே ஒருவன், “அதுதான் பாக்கோமே” என்றான். எல்லார் சார்பிலும் உடனே சிரிப்பு. ஒவ்வொருத்தியும் ஒவ்வொருவனைப் பார்த்துச் சிரித்தபோது சீனியம்மை சிரிக்க முடியாமல் திண்டாடியபோது, ஒரு பயல் “சினிமாவுலயும் புது முகம். இங்கேயும் புதுமுகண்டா” என்றான். சீனியம்மைக்கு சினிமாவில் புதுமுகம் என்றால் என்ன என்பது தெரியாததால், அவள் முகம் எந்தவித மாறுதலும் இல்லாமல் பழைய முகமாகவே இருந்தது.

படம் துவங்கியது. பீடிப் பெண்கள் ‘டயலாக்’ முடிவதற்கு முன்பே டயலாக்கைச் சொன்னார்கள். ஒவ்வொரு திரைமுகத்தையும் பெயர் சொல்லி அழைத்தார்கள். “இப்போ கமலஹாசன் வருவான் பாரு... பாரு...” என்று படத்தைப் பார்க்காமல் பக்கத்துப் பிரிவில் இருந்த பையன்களைப் பார்த்தார்கள். பெண் பெஞ்சுக்கும் ஆண் பெஞ்சுக்கும் இடையே ஒரு மூங்கில் கழி கட்டப்பட்டிருந்தது. நல்லதுக்குத்தான்,

சீனியம்மை இப்போது அதிகமாக வெட்கப்பட்டாள். அந்தப் பெண்கள் பேசப் பேச, தன் அறியாமையை நொந்து கொண்டாள். இன்னும் தான் நாகரிகப்படாமல் போனதற்காக வருத்தப்பட்டாள். நடிக-நடிகையர்களின் பெயர்களைப் பற்றித் தெரியாமல் பொன்னி, ஐ-ஆர் எட்டு, போஸ் கலப்பை போன்ற உருப்படாத பெயர்களை மட்டுமே தெரிந்து உருப்படாமல் போனதற்காக, தன் உருவத்தைக் கூனிக் குறுக்கிக்கொண்டாள். இந்த நிலம கூடாது. இவளுவள மாதிரியே முன் கொசுவம் கட்டணும். இவளுவள மாதிரியே சினிமா நடிகர்கள் பெயரைத் தெரிஞ்சி வச்சிக் கிடணும். இனுமேயும் கர்நாடவமாய் இருக்கப்படாது. இருக்கப்படாதுன்னா இருக்கப்படாதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/175&oldid=1368887" இலிருந்து மீள்விக்கப்பட்டது