பக்கம்:இன்னொரு உரிமை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
லவ் ஆல்

சென்னை நகரில், ஒரு சிக்கனப் பகுதி.

கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் போல், வெளியே புறாக்கூண்டு போலவும் உள்ளே மொஸைக் தரை போட்ட பல்நோக்கு அறைகளைக் கொண்ட, பல மாடிக் குடியிருப்புப் பகுதி, கண்ணின் கணக்குக்கு வராமல், உணர்வின் உரைக் கல்லாக உள்ள அரசாங்கக் குடிருப்பு வளாகம். தீப்பெட்டிகளை சதுர சதுரமாய், ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கியது போன்ற மாடிகள். அவற்றின் உச்சிகளில் சிலுவை போலிருந்த தொலைக் காட்சி ஏரியல்கள்.

ஈஸ்வரனின் ஆடல் பாதத்தில் அகப்பட்ட முயலகன் போல் சூரியச் சூட்டில் வீட்டிற்குள்ளேயே சிறை வைக்கப்பட்டிருந்த பலர் கடல் காற்று வீசத் துவங்கியதால், பால்கனிகளில் வந்து நின்ற நேரம். சில பெண்கள், மாடிப்படிகளைத் தாண்டி நான்குபுற கட்டிடச் சுவர்களுக்கு நடு நாயகமாக உள்ள மைதானத்தில் லேசாய் நடமாடிக் கொண்டிருந்த வேளை.

மைதான மத்தியில் ஏழெட்டு இளசுகளும், ஓரிரண்டு நடுத்தரவாதிகளும் இரண்டு கம்பங்களுக்கு இடையே, வாலி பால் நெட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். இருபுறமும், ஆட்டத்தைப் பார்ப்பதற்காக, ஸ்கர்ட் சிறுமிகளும், ஜீன்ஸ் பையன்களும், லேசாய் ஆடியபடி நின்றிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/18&oldid=1369503" இலிருந்து மீள்விக்கப்பட்டது