பக்கம்:இன்னொரு உரிமை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி171

அவள் தட்டில் இருந்த பீடிகளை எடுத்துப் பரிசோதித்துக் கொண்டே, பீடி சாக்கில் அவள் விரல் நுனியை லேசாகப் பிடித்தான். சீனியம்மைக்கு அவன் பிடித்ததே தெரியவில்லை. பீடிகள் தேறவேண்டுமே என்ற அச்சப்பிடியில் அவனது அவசரப் பிடி உறைக்கவில்லை. கணக்குப்பிள்ளை இலைகளை நிறுத்து அவள் தட்டில் போட்டுவிட்டு, தென்ன நாரைக் கொடுக்கும்போது தன் கையை அவன் அழுத்துவது போல் அவளுக்குத் தோன்றியது. அவனை முறைப்போடு பார்த்தாள். அவன் ஏஜெண்டைப் பார்க்கிற சாக்கில் எழுந்து அவள் காலை மிதித்தபோது, அது தெரியாத்தனமானதாய் அவளுக்குத் தோன்றவில்லை. உஷ்ணமாக அவனைப் பார்த்துக்கொண்டாள்.

இரண்டு மூன்று வாரங்கள் வந்தது தெரியாமல் பறந்தன.

சீனியம்மை கணக்குப்பிள்ளையிடம், பீடித் தட்டைக் கொடுத்துவிட்டு சற்றுத் தொலைவில் நின்றுகொண்டாள்.

அவன் நாரைக் கொடுக்க வந்தபோது “தட்டுல போட்டுடு அண்ணாச்சி...” என்று கடைசி வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துப் பேசினாள்.

அண்ணாச்சி என்று சொன்ன பிறகு, கணக்குப்பிள்ளை சும்மா இருப்பானா? இருக்கவில்லை.

சீனியம்மையின் பீடிகள் நன்றாக இல்லை என்று பலவற்றைக் கழித்தான். பீடி சுற்ற உதவாத பழுப்பு இலைகளாகப் பார்த்துக் கொடுத்தான். பிரிக்கமுடியாதபடி கட்டிக் கட்டியாக இருந்த தூள்களைக் கொடுத்தான். இந்த வேகத்தில் போனால் அவளே பீடி இலைக்கு காசு கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்படும் நிலை வரலாம். சீனியம்மையால தாளமுடியவில்லை.

“எதுக்காவ அண்ணாச்சி, இவ்வளவு பீடிய கழிக்க? அவள் தட்டுலயும் என் பீடி மாதுரிதான் இருக்கு; அதக் கழிக்கல. என் தட்டுன்னால் ஒனக்கு ஏன் இளக்காரம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/180&oldid=1369284" இலிருந்து மீள்விக்கப்பட்டது