பக்கம்:இன்னொரு உரிமை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172சு. சமுத்திரம்


கணக்குப்பிள்ளை பதில் பேசும் முன்பாக, சீனியம்மை சுட்டிக்காட்டியவள் சூடாகக் கேட்டாள். “எம்மாரு...ஒன் வரைக்கும் பேசு... என்னை எதுக்கு இழுக்க? நான் மூணு வருஷமா சுத்துறவள்!”

கணக்குப்பிள்ளை பேச்சை உதறினான்.

“அப்படிக் கேளு... நல்லாக் கேளு... அம்மாவுக்கு பெரிய ரம்பைன்னு நெனப்பு!”

சீனியம்மை சீறினாள். “இந்தா பாரு கணக்குப்பிள்ளை பேசணுமுன்னால் பீடி விஷயமாகப் பேசு! ஏரப்பாளத்தனமாகப் பேசுனியானால்... கையில இருக்கிற கத்தரிக்கோலு எங்கிட்ட இருக்காது! யாரப் பாத்துய்யா ரம்பை கிம்பைன்னு பேசற! ஒன் இரப்பாளி புத்தி தெரிஞ்சிதான் விலகி நிக்கேன்! நீ எதுக்காவ பீடிய கழிக்கன்னு தெரியும்!”

“ஏ, மரியாதியா வெளில போ!”

“இது என்ன ஒப்பன் வீட்டுப் பீடிக்கடையா? நீயும் என்னமாதுரி கூலிக்கு வேல பாக்குறவன்தான். இடையன் பொறுத்தாலும் இடக்குடி நாயி பொறுக்காதாம்...”

ஏஜெண்ட் உள்ளே இருந்து ஓடிவந்தார். விவகாரம் சூடு பிடிக்காமல் இருப்பதற்காக, கணக்குப்பிள்ளையை நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும்படி, “பொம்புள கிட்ட என்னல பேச்சு? பொட்டப்பயல...” என்றார். ‘அவர் சொன்ன தோரணை அவன் பொட்டப்பய... அவன் கிட்ட போயி பேசுறியளேன்னு’ பெண்களைப் பார்த்துக் கேட்பது போல் தோன்றியது. பின்ன என்ன... எந்தப் பெண்ணையாவது ஏஜெண்டுகிட்ட பேசவிடுறானா? ‘அவரு கோபக்காரரு... நான் சொல்லிக்கிடுறேன்னு இவனே என்னைக் காரணமாய்க் காட்டியே கண்ணடிக்கான்.’

சீனியம்மை பீடி இலைகளை ஈரத்துணியால் சுற்றி வைத்துக்கொண்டு அலுப்போடு திரும்பினாள். அவளோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/181&oldid=1369295" இலிருந்து மீள்விக்கப்பட்டது