பக்கம்:இன்னொரு உரிமை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு உரிமை 181

“இந்தமாதிரி பேசினியான்னா எனக்குக் கெட்ட கோவம் வரும், நான் பாக்குறது பிடிக்கல! நீயாவது ஒரு மாப்பிள்ளை பாரேன்!”

“ஒம்மமாதிரி நான் பராக்கு இல்ல. எங்க ஊர்ல இருந்து போயி மெட்ராஸ்ல எவர்சில்வர் கடை வச்சிருக்கார்ல. நாகரத்தினம். அவரு பையன் வக்கீலாம்! எங்க அய்யா கிட்ட வந்து நல்ல குடும்பத்துப்பொண்ணா பாரும். நகையும் வேண்டாம்: நட்டும் வேண்டாம் பத்தாவது படிச்சிருக்கணும். கட்டுன துணியோட விட்டால் போதுமுன்னு லட்டர் போட்டிருக்கார். மெட்ராஸ்ல ரெண்டு வீடு இருக்காம். தமயந்திய முடிச்சிடலாம்.”

“பையன் மெட்ராஸ்லே விலை போவாதவனா இருப்பான்... ஒருவேளை மாறுகண்ணா இருக்கலாம்!”

“இடக்குப் பேசாட்டா உமக்குத்தான் தூக்கம் வராதே! ஆம்பிள்ளைக்கு அழகு எதுக்கு? உமக்குக்கூடத்தான் மாறு கண்ணு. நான் சந்தோஷமா இல்லியா? நமக்கும் மெட்ராஸ்லே ஒரு ஆளு இருக்காண்டாமா?”

எவர்சில்வர் வியாபாரியின் மகனும், பிரபலமில்லாத வக்கீலுமான மோகனுக்கும் தமயந்திக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. “ஒண்ணும் வேண்டா முன்னு சொல்றத் துக்காக மாப்பிள்ளைக்கு எதிர்மாலையா பத்து கழஞ்சில ஒரு தங்கச்செயினு போடாண்டாமா?” என்று சின்னச்சாமி முறையிட, “கர்நாடகமுன்னு சிரிப்பாக” என்றாள் லட்சுமி.

தமயந்தி வக்கீல் மாப்பிள்ளை கிடைத்ததில் மகிழ்ந்து போனாள். லட்சுமி ‘ஒசி’க் கல்யாணத்தில் உச்சி குளிர்ந்தாள். சின்னச்சாமி மாயமோ மந்திரமோ என்று மனங்குளிர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/190&oldid=1369035" இலிருந்து மீள்விக்கப்பட்டது