பக்கம்:இன்னொரு உரிமை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100சு. சமுத்திரம்


தமிழ்ச்செல்விக்கு அவர்களைக் காக்கவைக்கப் பிடிக்கவில்லை. அவர்களை நோக்கி ஷைனி ஆப்ரஹாம் மாதிரியே ஓடுகிறாள். அதென்ன இன்னொருத்தி? அடடே நடிகை நந்திகுமாரி! இவங்களுக்கு இங்கென்ன வேலை? சந்திரன் அவளிடம் ஒரு காகிதத்தை நீட்ட, அவள் அதை அவன் கையில் வைத்தபடியே படிக்கிறாள். அப்புறம் சிரிக்கிறாள். அப்போதுதான் நடந்து பழகுபவள்போல் காமிரா முன் தடந்து காட்டுகிறாள். சந்திரனிடம் பேசிக் காட்டுகிறாள்.

தமிழ்ச்செல்வி, பி.டி. உஷாவாகிறாள். எதிர்த்திசையில் உஷாரில்லாமல் போன தன் மகளை நோக்கி அம்மாக்காரி கிழட்டு வேகத்தோடு ஓடிவருகிறாள். காய்ந்த அந்த உடம்பு காற்றடித்த சருகாக மகளிடம் ஒட்டிக்கொள்கிறது, அத்தனைபேர் காதுகளும் உள்வாங்கும்படி வாய் ஓலமிடுகிறது.

"பாவி மகளே மோசம் போயிட்டோமேடி... மோசம்! அடேய் அடுத்துக் கெடுத்த பயலே! ஒன் நாடகம் பேர் வாங்குனதுக்கு என் மகளோட நடிப்பு தானடா காரணம்! இவளால ஓடுன ஒண்ணுல இருந்து இவளையாடா ஓட வைக்கே! நீ உருப்படுவியா... இந்த ஒரு படத்தோட நீ ஓடு எடுக்கிறியா இல்லையான்னு பாரு! ஏய் தடிமாடு எங்கேடி போறே!"

தமிழ்ச்செல்வி அம்மாவை அப்புறப்படுத்திவிட்டு, அவளை அரைவட்டமாய் ஒரு சுற்றுச் சுற்றி தன் ஆவேசத்தைக் காட்டிவிட்டு, படப்பிடிப்பு இடத்திற்கு நிதானமாய் நடக்கிறாள். போய்ச் சேர்கிறாள். அவளுக்கு முதுகைக் காட்டியபடி 'பிஸியாக' நின்ற சந்திரனின் தலையில் தட்டு கிறாள். திரும்பிப் பார்ப்பவனிடம் 'ஒரு நிமிஷம்' என்கிறாள். இருவரும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு வந்ததும், சந்திரன் அமாவாசையாகி தனிமைப்படுகிறான். அப்புறம் ஒப்பிக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/209&oldid=1369048" இலிருந்து மீள்விக்கப்பட்டது