பக்கம்:இன்னொரு உரிமை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12  சு. சமுத்திரம்


சம்பத், பின்நோக்கிப் போய், முன் நோக்கி நின்றான். எல்லோரும் அவன் கையில் இருந்த பந்தையே பார்த்த போது. அவன் வலது கரத்தைப் பின்புறமாய்க் கொண்டு போய், இடது கரம் ஏந்திய பந்தை தூக்கிப் போட்டு ‘மட்டையடி’ அடித்தான். அவ்வளவு தான். அந்தப் பந்து விண்வெளிக்கலம் போல் மேல்நோக்கிப் போய், அப்புறம் அரை வட்டமாகி, கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த பந்து 'அவுட்டா' என்பதுபோல நோட்டம் பார்த்த எதிர் அணி சர்விஸ்காரர். இரண்டு கரங்களையும், விரல் பரவக் குவித்து, விழப்போகும் பந்தை, விழியாடாது குறி பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு பக்கம் நான்கைந்து பெண்கள், வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த பழக்காரரிடம் பைசாக் கணக்கில் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பூக்காரக் கிழவியிடம் சில பெண்கள் முழம் போட்டு வாங்காமல் நாக்குகளை முழக்கணக்கில் காட்டிச் சரி பார்த்துவிட்டுக் கேட்டிருக்க வேண்டும். இல்லையானால் பூக்காரக் கிழவி அப்படித் தலையில் கை வைத்தபடி அவர்களைப் பார்த்திருக்கமாட்டாள்.

எப்படியோ வாலிபால் துள்ளத் துவங்கியது. பெண்கள் தலைகளில் பூச்சூடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சப்போட்டா பழத்தை சப்பிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு பிளிறல் சத்தம். அந்த சத்தத்தை மூழ்கடிக்கும் நாய்களின் உறுமல் சத்தம். குப்பைத் தொட்டிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த அதோ அந்த சொறி நாய்கள் வியூகம். எப்படியோ எங்கிருந்தோ வந்த ஒரு சின்ன பன்றிக்குட்டி சுவரோடு சுவராக நிற்கிறது. வெள்ளைப் புள்ளிகள் கொண்ட அழகான குட்டி. அதை அப்படியும் இப்படியும் தப்பிக்க முடியாதபடி நாய்கள் நெருங்கிக்கொண்டிருந்தன, ஐந்து நாய்களும், ஒருமுகப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/21&oldid=1369509" இலிருந்து மீள்விக்கப்பட்டது