பக்கம்:இன்னொரு உரிமை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 203

தனியார் கம்பெனி ஒன்றில் எடுபிடி ஆளாகச் சேர்ந்து தனிப் பட்ட முறையில் படித்து உதவி நிர்வாக அதிகாரியாக ‘ரிடயரானவர்’. மூன்று மகள்களையும் இரண்டு மகன்களையும், கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தவர். அவர்கள் இப்போது நலல நிலைமையில் இருப்பதைக் கண்குளிரப் பார்க்கிறவர். அவர்களால் இவருக்கு கண் தான் குளிர்ந்தது. வயிறு குளிரவில்லை. கிராமத்தில் கொஞ்சம் நில புலன் இருந்தது. கம்பெனியில் இருந்து விடுபட்டதும், பிள்ளைகளும் விடுபட்டார்கள். ஆகையால் கிழவர் மனைவியுடன், சொந்தக் கிராமத்திற்குச் சென்று குத்தகைப் பணத்தையும் பிள்ளைகள் அனுப்பிய பணத்தையும் வைத்து காலத்தைக் கடத்தினார்கள், காலத்தை அவர்கள் கடத்தினார்களே தவிர, அவர்களைக் காலம் கடத்தவில்லை. ‘அம்மா ... அப்பா மண்டையைப் போட்டதும், கிராமச் சொத்துக்களை விற்கலாம்’ என்று காத்திருந்த மகன் மகளுக்கு பொறுமை போய்விட்டது. கிராமியச் சொத்துக்கள் விற்கப்பட்டன. மகள்கள்—அம்மா காலமான பிறகும் அவளின் நினைவுச் சுவடுகள் நெஞ்சில் இருக்கவேண்டும் என்று நினைத்து தாய்க்காரியின் நகைகளை பிடுங்கி இப்போது தத்தம் நெஞ்சுக்கு மேல் காட்டிக்கொள்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பு இங்கே வந்தார்கள். தலைப் பிள்ளை தந்தைக்கு இன்பம் என்பார்கள், அது எப்படியோ கிழவருக்கு அது பொருந்தும். மகன் அருகிலேயே இருக்கப் போகிறோம் என்று சந்தோஷமாகத்தான் வந்தார். ‘மூத்தவள் ஒரு மாதிரியாச்சே’ என்று இழுத்த கிழவியை, இழுத்துக்கொண்டே வந்தார். மூத்த மருமகளை சும்மா சொல்லக்கூடாது. ஜாடை மாடையாகக் கூடத் திட்ட மாட்டாள். அவர்களைப் பார்த்ததும், சாமான்களை எடுத்து வீசியெறியக் கூட மாட்டாள். நல்லவள் தான் ஆனால் இவர்களிடம் பேசமாட்டாள். ‘சாப்பாடு போதுமா’என்று ஒப்புக்குக்கூட விசாரிக்கமாட்டாள். இவர்கள் வெளியே நின்றால், சினிமாவுக்காகப் புறப்பட்டு வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/212&oldid=1369478" இலிருந்து மீள்விக்கப்பட்டது