பக்கம்:இன்னொரு உரிமை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 207

இப்போதான் மொட்டை மாடிக்கு வந்திருக்கான். இவளுக்கும் கொல்லைப்புறப் பக்கம் கொஞ்சம் வேலையிருக்கு. பாமா பட்டென்று சொன்னாள்:

“சீக்கிரமா தூங்குங்க. அப்பா, ஒரு விஷயத்தை ஒங்க கிட்டே ‘கன்வே’ பண்ணச் சொன்னாங்க. அங்கிளும் டாடியும், நீண்ட நேர ‘வாருக்கு’ அப்புறம் ஒரு ‘டிஸிஸனுக்கு’ வந்துட்டாங்க. நீங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் மதுரைக்குப் போகணுமாம். யார் மதுரைக்குப் போறதுன்னு இதுலயும் ஒரு ‘வார்’ வந்தது. அப்புறம் தாத்தா அங்கிளோட போறதுன்னு முடிவாயிட்டு, ரெண்டுபேரையும் ஒருத்தரால பார்க்க முடியாதுன்னு அப்பா சொன்னதை அங்கிள் அரை குறையா ஒத்துக்கிட்டார். ஓ.கே... தாத்தா காலையில ஒன்பது மணிக்குப் புறப்படனுமாம். டிரஸ்கள எடுத்து வச்சுக்கனுமாம்...”

பாமா பேசியபோது, தட்டில் கைவைத்த பெரியவர், அசரீரியாய் ஒலிப்பது போலிருந்த அந்த வார்த்தைகளை உற்றுக் கேட்பதுபோல் தன் உடம்பையும், உட்கார்ந்த இடத்தையும் நெருக்கிக்கொண்டார். அந்த முதியவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. கணவனின் கையை, பலமாகப் பிடித்துக்கொண்டே திக்குமுக்காடிப் பேசினாள்:

“ஏம்மா! நீயாவது ஒன் அப்பனுக்காவது சித்தப்பனுக்காவது உறைக்கும்படியாய் கேட்கப்படாதா! இந்தத் தள்ளாத வயசில நாங்க ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்க முடியுமா? இந்த நாற்பத் தஞ்சு வருஷத்துல, நாலு நாளைக்கி மேல பிரிஞ்சதில்லம்மா...”

பாமாவுக்கு முதலில் சிரிப்பு வந்தது. ‘கிழடுங்களுக்கு, இன்னும் காதலா?’ பிறகு பாட்டியின் முகத்தையும், தாத்தாவின் கண்களையும் பார்த்தவளுக்கு, பத்து சதவீதம் மனிதாபிமானம் வந்தது. தோளைக் குலுக்கிக்கொண்டே பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/216&oldid=1369483" இலிருந்து மீள்விக்கப்பட்டது