பக்கம்:இன்னொரு உரிமை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212  சு. சமுத்திரம்


மார்போடு சேர்த்து அணைப்பது போலிருந்தது. அப்புறம் விம்மல் சத்தம் "வருத்தப்படாதப்பா... நாம எண்ணங்களா லேயே தொடர்பு வச்சுக்கலாம். எண்ணங்களாலேயே வாழலாம்." என்ற வார்த்தைகள் விட்டு விட்டு கண்ணீரில் தோய்ந்து காதில் கரைந்து ஓலமாக வெளிப்பட்டது.

கிழவி கணவரை பலங்கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள். பாசங்கொண்ட மட்டும் ஒட்டிக் கொண்டாள். அவர் கண்ணீரைத் துடைக்கப் பார்த்தாள். பாழும் கைகள் அவர் தோளில் இருந்து எழ விரும்பவில்லை. அவரை மார்போடு அணைக்கப்போனாள். அவர் மார்பில் சாய்ந்த உடலுக்கு நிமிர மனமில்லை. கிழவர் அவள் தோளில் வாய் தேய்த்து புலம்பினார். குழந்தையான கிழவி தாயாகி நிஜமான ஒரு ஜீவனுக்கு தாயான ஞானச் செருக்கோடு "காலையில் கடவுள் கண்ணைத் திறக்கானான்னு பார்க்கலாம்." என்று கிட்டத்தட்ட ஐநூறு தடவை சொல்லியிருப்பாள்.

காலையில் கதிரவன் கண்ணைத் திறந்தான். கட்டிப் போட்டிருந்த பசு மாடு கண்ணைத் திறந்தது. வீட்டின் ஜன்னல் கண்கள் திறந்தன. கோழிகளின் கண்களும், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் அனைத்தும், அனைவரும் கண்கள் திறக்க, அந்தத் தெருவே கண் திறந்தது. ஆனால் கடவுள்-

அவன் கண் திறந்தானோ இல்லையோ, வாசலில் வாடகைக் காராக வந்து நின்றான். ஒருவர் மரணத்திற்கு இன்னொருவர் ஒப்பாரி வைத்தது போல், இரவு முழுக்க பிடித்த பிடி விடாமல் தழுவிய தழுவல் வழுவாமல், பின்னிய விரல்கள் பின்னியபடி மூலையில் சாய்ந்திருந்த அந்த முதிய அன்னப்பறவைகளில் ஒன்றை மதுரை மகன் "ராத்திரி சாப்பிடலியா? ரெடியாயிட்டிங்களா?" என்றார். சாப்பி டாததற்கு காரணத்தை அறியுமுன்னாலேயே அவர் 'ரெடிக்கு' வந்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/221&oldid=1368987" இலிருந்து மீள்விக்கப்பட்டது