பக்கம்:இன்னொரு உரிமை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 213


வாசலில் நின்ற காரில் மருமகள் ஏறிவிட்டாள். பேரனும், பேத்திகளும் யார் ஒரப்பக்கம் உட்கார்வது என்று சண்டையிட்டு, அப்புறம் ஒரு வழியாக உட்கார்ந்தார்கள். மூத்தவர் மனைவி சிரிப்பைச் சிந்தியபடியும். பாமா மொட்டை மாடியை நோக்கிய கோணல் பார்வையுடனும் நின்றார்கள். பெரிய மகன் அப்பாவைக் கைத்தாங்கலாகப் பிடித்து, காரின் முன்னிருக்கையில் உட்கார வைக்கிறார். மதுரை மகன், “அவரு... பின்னால உட்காரட்டும்” என் கிறார். அப்பாவை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தவன் சொல்லை மதிக்க வேண்டும் என்பதுபோல், மூத்தவர் தன்னைப் பிறப்பித்தவரை மீ ண் டு ம் கைத் தாங்கலாக பிடித்து பின்னால் வைக்கிறார். கார் புறப்படப் போவதை டிரைவர் எல்லோரையும் வட்டப் பார்வையாகப் பார்த்து விட்டு சாவியைத் திறக்கிறார். பாமா மொட்டைமாடி ரவியை பார்வையால் பிரிய விரும்பாதவள்போல், அங்கே பார்த்தபடியே, இங்கே-இந்தக் காருக்குள் இருப்பவர்களை நோக்கி டாட்டா காட்டுகிறாள்.

கிழவர் சப்தமும் ஒடுங்கி, சப்த நாடிகளும் ஒடுங்கி, தேரில் வைத்த பிணம்போல் பேச்சற்று இருக்கிறார். பின்னால் திரும்பி மனைவியைப் பார்க்க விரும்புகிறார். பிறகு வாயை மூடி, கண்களைக் கசக்கி அப்புறம் அசைவற்று இருக்கிறார்.

கார் புறப்படுகிறது-இழவு வீட்டுச் சங்குபோல் ஒரு ஒலியை எழுப்பிக்கொண்டு.

அறையே சிறையாக, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து, தள்ளாத குறையாக காருக்குள் திணிக்கப்பட்ட கணவரையே பார்த்த கிழவி, போகிற காரையே பார்க்கிறாள். அந்தக் காருக்குப் பின்னால் தான் ஒடுவதுபோன்ற உணர்வு, அதன் முன்னால் அடிபட்டு விழுந்து கார் நிறுத்தப் பட்டது போன்ற பிரமை. திடீரென்று அவளுக்கு இன்னொரு நினைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/222&oldid=1369388" இலிருந்து மீள்விக்கப்பட்டது