பக்கம்:இன்னொரு உரிமை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 சு. சமுத்திரம்

வலி ஏற்பட்டபோதுதான் அவன் கண்விழித்துப் பார்த்தான் மோகனா அங்கே இல்லை. பக்கத்து அறையில் துடைப்பச் சத்தம் கேட்டது. அங்கே ஓடினான்.

“மோகனா எனக்கு ஒரு காப்பி வாங்கிட்டு வர்றியா?”

சரி என்பதுபோல், அவள் துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு. கைகளை முந்தானைச் சேலையில் துடைத்த போது வைரவனுக்கு அன்பு அதிவேகமாய்ப் பிறப்பெடுத்தது.

“நீயும் ஒரு காப்பி குடிக்கணும். அப்போதான் நானும் குடிப்பேனாம். என்ன சரியா?”

சரியில்லை என்பதுபோல் மோகனா கீழே கிடந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, இன்னொரு அறைக்குள் போனாள். ஒட்டடைக் கம்பை வைத்து டியூப்லைட்டில் படிந்த தூசியைத் தட்டிய அவள் முதுகோடு முதுகாக அவன் சாய்ந்து, அவள் கைபிடித்த கம்பிற்குமேல் தன் கையைப் பற்றிவிட்டு, “அதோ தூசி இருக்கு பாரு... அதோ சிலந்தி வலை இருக்கு பாரு ஒனக்கு எட்டாத இடத்துல இருக்குதோ, சரி... நீ அப்பிடியே நிற்பியாம். நான்...” என்று அவள் மேல் சாயப்போனான்.

மோகனாவால் இதற்குமேல் தாங்க முடியவில்லை—கட்டிய புருஷன் பாயிலும், நோயிலுமாய்க் கிடப்பது உண்மைதான். இந்த வேலை போய்விட்டால் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்பதும் உண்மைதான். அதுக்காக? மோகனா நெருப்புத் தணலாய்க் கேட்டாள்.

“நான் ஏற்கனவே நொந்துபோனவள். என்னை ஒங்க தங்கையாய் நினையுங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்...”

வைரவன் கடகடவென்று சிரித்தான்.

“பத்து வருஷத்துக்குப் பிறகு இப்படிச் சொன்னால். ஒருவேளை நான் அப்படி நினைக்கலாம். அது கூட முடியாது. ஏன்னா ஒன் உடம்பு இருக்கே அது அச்சுமாதிரி உடம்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/227&oldid=1369438" இலிருந்து மீள்விக்கப்பட்டது