பக்கம்:இன்னொரு உரிமை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்ன மனிதர்கள் 221

இப்போது ரமணன் குழைந்து குழைந்து பேசினான்.

“மோகனா ஓங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்றதுக்குத்தான், அவனை வெளியே அனுப்பினேன். நீ சரியாய் வேலை செய்யலியாம்! ஒன்னை நிறுத்திடணுமாம். இன்னைக்கே வைரவன் கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுக்கப்போறானாம். டோன்ட் ஒர்ரி... அவன் எதுக்காக அப்படி மிரட்டறான்னு எனக்கு நல்லாவே தெரியும். பட்... அவன் புகாரை நான் கிடப்புல போடவும் முடியாது!”

“சார்... இந்த வேலை மட்டும் போயிட்டா நாங்க ஒரு வேளை சாப்பிடறதுகூட...”

“ஒன்னை நான் அப்படி விட்டுடுவேனா? எல்லா விஷயத்தையும் விவரமாப் பேசலாம் , நாளைக்குக் கோடம்பாக்கம் தியேட்டர்ல பதினொரு மணிக்கு வந்துடு. அவன் என்ன கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கான், நீ அதுக்கு எப்படி பதில் சொல்லணும்னு நான் விளக்கமாச் சொல்றேன். சரியா பதினொரு மணிக்கு வந்துடு... குட்மார்னிங் சார்...!”

மோகனா, திகைத்து நின்றபோது டெப்டி டைரக்டர் ஜான்சன் வந்துவிட்டார். நாற்பது வயதுள்ள அவரை சபாரி டிரெஸ் நாற்பத்தைந்தில் தூக்கிப்போட்டது. ரமணனிடம் மிடுக்காகக் கேட்டார்.

“டூர் பேப்பர்ஸ் ரெடியா... கோயம்புத்தூர் கான்ட் ராக்ட் பைல், ஆடிட் பைல் எடுத்து வச்சிட்டியா மிஸ்டர்?”

“இதோ எடுத்து வச்சுக்கிட்டே இருக்கேன் சார்!”

“இன்னுமா எடுக்கலே? வாட் எ மேன் யூ வார்... ட்ரெயின் கிளம்ப இன்னும் அரை மணி நேரம்தான் இருக்குது.”

“ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் சார்!”

“இந்தம்மா யாரு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/230&oldid=1369426" இலிருந்து மீள்விக்கப்பட்டது