பக்கம்:இன்னொரு உரிமை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உறவுக்கு அப்பால்

து, தியாகராஜன் மறைந்த மூன்றாவது ஆண்டு நினைவு நாள்.

தியாகராஜனின் மனைவி காமாட்சி சென்ற இரவு அழுது தீர்த்து வீங்கிப்போன முகத்துடன், அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையில் இருந்த அவர் போட்டோவை எடுத்து மேஜையில் வைத்தாள். ஊதுபத்தியைப் பத்து வயது சிறுவன் பிடித்துக்கொண்டிருக்க, கல்லூரியில் பி யூ.சி. படிக்கும் பதினேழு வயது பையன் மோகன், ஊதுபத்தியைக் கொளுத்தினான். அப்போது ஒரு ரோஜாப் பூ மாலையுடன் வீட்டுக்குள் வந்த வித்யா, மாலையை அப்பாவின் படத்தில் மாட்டப் போனாள். பிறகு, என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அதை அம்மாவிடம் கொடுத்தாள். காமாட்சி கண்ணீர் மாலை கழுத்தில் வியாபிக்க, கை மாலையை எடுத்து படத்தில் போட்ட போது, அவள் உடல், உள்ளத்தில் தோன்றிய பூகம்ப உணர்ச்சியால் ஆடியது. வித்யா அம்மாவைக் கைத்தாங் கலாக அணைத்தவாறு, படத்திற்கு எதிரே உட்காரவைத்து, தானும் உட்கார்ந்தாள்.

நால்வரும் அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தார்கள். மௌனத்தை மீறிய ஏதோ ஒன்று பட்டும் தொட்டும் காட்ட முடியாத, இனம் புரியாத ஒரு உணர்வு அங்கே மௌனத்துடன் சேர்ந்து ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/233&oldid=1368926" இலிருந்து மீள்விக்கப்பட்டது