பக்கம்:இன்னொரு உரிமை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அப்பால் 329

என் பொண்ணு வேறயா? ஒங்களுக்கு இந்த ஐம்பது வயதுல நாற்பது வயசுக்காரன் பையனாத் தெரியுறது நியாயந்தான். ஒரு இருபத்திரண்டு வயதுக்காரிக்கும் அவன் பையனா தெரிய முடியுமா?"

வந்தவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.

அன்றுதான் உண்மையான இழவு நடந்ததுபோல், காமாட்சி எதுவும் சாப்பிடாமல், பிள்ளைகளையும் சாப்பிடச் சொல்லாமல் ஒரு மூலையில் போய் முடங்கிக் கொண்டாள்.

வித்யாவுக்கு மூளை மரத்துப்போனதுபோல் தோன்றினாலும், இதயம் வெளியே வரப்போவது போல் துடித்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் டில்லியில் வடநாட்டுப் பெண்ணைப்போல் ‘சல்வார்-கமீஸுடன்’ தன்னுடன் பி. ஏ. (ஹானர்ஸ்) படித்துக்கொண்டிருந்த சக தோழிகளுடன் அஜ்மல்கான் பார்க்கை அலசியது, உல்லாசமாக சண்டிகர் போனது, தாஜ்மகால் பார்த்தது அங்கே அவர்கள் அவளை ‘மும்தாஜ்’ என்று சொன்னது, “இனிமேல் உனக்குக் கேக் தரமாட்டேன். அதனாலதான் நைட்ல சாப்பிட மாட்டேங்கறே” என்று அம்மா கடிந்துகொண்டது. டில்லி யூனிவர்சிட்டி மாணவர் யூனியன் தேர்தலில் ஜாயிண்ட்-செகரட்டரிக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது, ‘எ ஓட் பார் வித்யா, இஸ் எ ஓட் பார் சத்யா’ என்று சக தோழிகள் ஒலி பெருக்கிகளை வைத்துக்கொண்டு கத்தியது, சென்னைக்கு விடுமுறையில் சின்ன அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது ரவி அவளிடம் வளைய வளைய வந்தது. அத்தைக்காரி “வித்யா, இந்த ரூம் உனக்குச் சரிப்படாது தான். இருந்தாலும் சகிச்சிக்கம்மா.” என்று குழைந்து பேசியது. எல்லாமே நினைவுக்கு வந்தன. அந்த நினைவின் சுமைகள் விழிகளைக் கவிழ்க்க அவள் கண் கலங்கியவாறே கண்மூடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/238&oldid=1369444" இலிருந்து மீள்விக்கப்பட்டது