பக்கம்:இன்னொரு உரிமை.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 சு.சமுத்திரம்

கோமதி, அழுகையை அடக்கிக்கொண்டே, “சரி... வாண்ணா போகலாம். வீடு எக்கேடாவது கெடட்டும். அவரு தள்ளி வைச்சால் வைக்கட்டும் , அம்மாவை தான் பார்த்தாகணும்; என்ன நடந்தாலும் சரி”, என்றாள்.

நாலும் தெரிந்த அண்ணன் அசையாமல் நின்றபோது, கோமதி “டிரைவர் அண்ணா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம். என்னை இப்பவே அம்மாகிட்டே கொண்டு விட்டுடுங்க! தயவுசெய்து காரை எடுங்க. டிரைவர் அண்ணா உங்களைத் தான்... இனிமேலும் என்னால இருக்க முடியாது. இருக்கவே முடியாது” என்று கத்தினாள்.

டிரைவர் கண்களைத் துடைத்துக்கொண்டபோது, அம்மாவின் ஆசை விமோசனம் தங்களுக்கு சாபமாகிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த அண்ணன் “ஒரு மூட்டை நெல்லையும் ஒன் வாழ்க்கையையும் ஒரே தட்டுல நிறுத்துப் பார்க்கிறவள் உன் மாமியார். கொஞ்சம் பொறுத்திரு. உன் மாப்பிள்ளையை எப்படியாவது தேடிப் பிடிச்சுக் கொண்டு வரேன்... டிரைவர் வண்டிய எடுக்கிறீங்களா? இந்த வீட்டை இப்படியே போட்டுட்டுப் போனால், இவள் அப்புறம் இங்கே வரவே முடியாது”.

முப்பது மைல் தொலைவில் உள்ள இடத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கக் கார் பறந்தது.

கார் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கோமதி, வீட்டுக்குள் வந்து சமையலறையில் கல்லாய்ச் சமைந்தாள். இடம் பொருள் ஏவலென்று எதுவுமின்றித் தானிருப்பது. தனக்குப் புரியாதவளாய், நடந்ததை நம்ப முடியாதவளாய், நம்புவதை நிராகரிப்பவளாய்க் காலத் துளியில் கரைந்து போனவள்போல், கண்ணீர் விடாமலே இருந்த இடத்திலேயே இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/37&oldid=1369599" இலிருந்து மீள்விக்கப்பட்டது