பக்கம்:இன்னொரு உரிமை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமனுக்கு ஆகாது 33

முத்தையாவின் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே, “நீ படேண்டா!” என்று அவள் சொன்னபோது, அவள் கண்ணிர் முத்தையாவின் தலையில் சூடாக விழுந்தது. முத்தையாவுக்கு என்னவென்று புரியவில்லை. கண்ணுங் கெட்டு, காதுங் கெட்ட அய்யாவுக்கோ எதுவுமே தெரியவில்லை.

கிழவி, மகனைக் கொஞ்சநேரம் விழுங்கிவிடுவதுபோல் பார்த்துவிட்டு “முத்தையா... ஜாக்கிரதையாப் படுடா. பூச்சி புழு இருக்கான்னு பாத்துப் படு! நாளைக்கித் தோட்டத்துக்குப் போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, சமையலறைக்குள் மருமகளோடு போனாள். குழந்தையின் தொப்புள்கொடி, மாலைமாதிரி கழுத்தைச் சுற்றி இருந்த காட்சி அவள் மனத்தை வதைத்தது.

நார்க்கட்டிலில், தன்னோடு ஒண்டிக்கொண்டு கிடந்த அந்த மான்குட்டியை, பாக்கியம் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். பிரசுரமான முதல் கதையைப் பார்க்கும் புதிய எழுத்தாளனின் பெருமிதத்தைப்போல் தலைப்பிள்ளையின் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டாள். கிழவி உள்ளே வந்தாள்.

“அம்மா... இந்தப் பயல பாரு! அய்யா காலு மாதிரியே இருக்கு பாத்தியா! காத பாரும்மா. அண்ணனோட காது மாதிரி... தாடையோட ஒட்டிக்கிட்டு இருக்கத பாரேன். முகம் யாரு மாதிரிம்மா இருக்கு?”

கிழவி பேச்சை மாற்றினாள்.

“பாக்கியம்... ஒன் அண்ணனுக்கு மூக்குல ஒரு துளை இருக்கே அது எதுக்குன்னு தெரியுமா?”

“என்னம்மா... பச்சைப் பிள்ளக்கிட்ட பேசறதுமாதிரி பேசுற ஏழுபேரு செத்துப்போனாங்க. இவனாவது தங்கட்டுமுன்னு மூக்கில வளையம் போட்டதாயும். அந்த வளையம் அப்புறம் விழுந்துட்டுதுன்னும் எத்தன தடவ சொல்லியிருக்க? எதுக்கும்மா கேக்குற?”

சி.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/42&oldid=1388334" இலிருந்து மீள்விக்கப்பட்டது