பக்கம்:இன்னொரு உரிமை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 சு.சமுத்திரம்

ஒண்ணும் இல்லம்மா... நமக்குக் கறிவேப்பிலமாதிரி ஒருவன் இருக்கான், தங்கச்சின்னா உயிர விடுவான்.

“இத நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா... உன் வீட்டு மருமவன் என்ன ஒருநாள் செல்லமா திட்டுனாரு. அண்ணாச்சிக்கு அதுகூடப் பிடிக்கல. ‘அவிய’ கூட பேசாம நேரா வீட்டுக்கு வந்துட்டாரு. அவிய கூட அப்புறம் ஒரு மாசம் பேசவியே.”

“நீன்னா அவனுக்கு உசிருமா. ஆனால் அவன் உசிருதான் இடையில போயிடும்போல தோணுதம்மா!”

“நீ... நீ... என்னம்மா சொல்ற! அண்ணாச்சிக்கு ஒண்ணுன்னா... முதல்ல நான் இருக்கமாட்டேன்! சீக்கிரமாச் சொல்லும்மா. அண்ணாச்சி உடம்புக்கு ஏதாச்சும்... சொல்லேன். சீக்கிரமாச் சொல்லித் தொலையேன்!”

“பிள்ள குலமழிச்சா பெத்தவ என்ன செய்வா?”

“உனக்கு அறிவிருக்கா! என்னம்மா நடந்தது? அண்ணாச்சிக்கு என்ன? ஐயோ சொல்லும்மா!”

“உன் மவன், மால சுத்தி பிறந்திருக்காம்மா! மாமனுக்கு ஆகாதே!”

பாக்தியம் ஸ்தம்பித்துப் போனாள். ஒருகணம், தன் பிள்ளையை வெறுப்போடு பார்த்தாள். அதனிடமிருந்து சிறுது விலகினாள். அவளை ஒட்டிப் படுத்துக் கிடந்த குழந்தை, இதனால் லேசாகப் புரண்டது. கை, உடம்புக்குள் ஒத்தியது. பாக்கியத்திற்கு மனசு கேட்கவில்லை. குழந்தை முன் கையை எடுத்து சரி செய்துவிட்டுத் தன்னோடு அனைத்துக் கொண்டாள். அம்மாவை வெறித்துப் பார்த்தாள்.

“நான் பாவிம்மா... எனக்குக் கல்யாணமே ஆயிருக்கக் கூடாதம்மா. ஐயோ! கடவுளே! குழந்தை பிறக்கணுமுன்னு யாரு கேட்டா! பாவி கடவுளே! அண்ணாச்சி! அண்ணாச்சி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/43&oldid=1388336" இலிருந்து மீள்விக்கப்பட்டது