பக்கம்:இன்னொரு உரிமை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகலில் சென்னை 41

வேதா நடந்தாள். அதோ பாரிமுனை தெரிகிறது. நடக்க நடக்க, அது மலை மாதிரி போய்க்கொண்டுதான் இருக்கும். ஆனாலும் பதினனந்து நிமிடத்தில் நடந்துவிடலாம். இதுக்காக இன்னொரு பஸ் வேண்டாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூருக்கு நேரடி பஸ் இருக்கவே இருக்குது.

வேதாவுக்கு நடக்க நடக்க வலதுதோள் வலிப்பதுபோல் இருந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஐந்து நிமிடம் வரை யோசித்தபடியே தொடர்ந்து நடந்தவளுக்கு அப்புறம்தான் புரிந்தது. லேசாய் தனது மக்குத் தனத்தையே எள்ளி நகையாடுபவள்போல் சிரித்துக்கொண்டாள். வலது தோளுக்கு வலிகொடுத்த ஜோல்னா பையை இடதுதோளுக்கு மாற்றுவதற்காக அதை எடுத்தாள். உடனே—

கண்கள் பறிக்கப்பட்டவள்போல் அவற்றை உருட்டாமல் பிறட்டாமல் வைத்தபடியே அந்தப் பையைப் பார்த்தால், மேலே போட்டிருந்த ஜிப் என்னமோ மூடித்தான் கிடந்தது. ஆனால் அந்தப் பையின் மத்தியப் பகுதியில் சதுரமான ஓட்டை, ஒரு கையை உள்ளேவிட்டு, தாராளமாக வெளியே எடுக்கலாம். பைக்குள் வெள்ளை வாயில் புடவை இருந்ததால் அது ஓட்டை மாதிரி தெரியாமல், பேஷனுக்கு வெள்ளைத்துணி தைத்து வைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றியது.

வேதா அவசர அவசரமாக ஜிப்பைத் திறந்தாள். கை போட்டுத் துழாவினாள். பர்ஸைக் காணவில்லை. ஐந்து ரூபாய் நோட்டுக்களையும், ஒரு இரண்டு ரூபாய் நோட்டையும் உள்ளடக்கிய பர்ஸ். இல்லவே இல்லை. பைக்குள் இருந்த ஒவ்வொரு துணியாக வெளியே எடுத்து உதறினாள். இதற்குள், இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எங்கேயும் கூடும் கூட்டம் அங்கும் கூடப்போனது, அவள் பைக்குள் துணிகளை மீண்டும் பலவந்தமாய் திணித்துவிட்டு, ஓட்டமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/50&oldid=1388385" இலிருந்து மீள்விக்கப்பட்டது