பக்கம்:இன்னொரு உரிமை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகலில் சென்னை 47

அடையாளம் கண்டுகொள்ளப்படலாம் என்று திரும்பாமலும் ஒடினாள். கால்கள் தானாக நின்றபோது அவளுக்கு நின்ற இடமோ அதன் திக்கோ திசையோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் ஒரு ஐம்பது வயதுக்காரனிடம்தான், அவள் கேட்டாள்—திருவான்மியூருக்கு எப்படி வழி என்று. ஆனால் அந்த மனிதரோ, “என் கூட வா” என்று சொல்லி அவளுக்கு இணையாக நடந்தார். அவள் தந்தையோடு நடப்பதுபோல் நடந்தபோது, அவர் கையைப் பற்றியபடியே “ஹோட்டலுக்குப் போயிட்டுப் போகலாம்” என்றார். வேதா பீதியுற்றாள். அந்தப் பீதியுடன் இனந்தெரியாத தைரியமும் தானாய் வந்தது. அவரைக் கோபமாகவும், விரோதமாகவும் முறைத்துப் பார்த்தாள். மீண்டும் ஒட்டமும் நடையுமானாள் ஆங்காங்கே போலீஸாரைக் கண்டபோது மட்டும், தன்னைத்தானே மறைத்துக் கொண்டாள்.

எப்படியோ, கடற்கரைச் சாலையைக் கண்டுபிடித்து, கண்ணகி சிலையைக் கடந்து வானொலி நிலையத்தைத் தாண்டி வேகவேகமாய் நடந்தாள். வடசென்னையில் இருக்கும் சித்தியை கோபம் கோபமாய் நினைத்துக்கொண்டாள். “நான் தனியாகவே திருவான்மியூருக்குப் போறேன்னு சொன்னது நிசந்தான். அதுக்காக, என்னைத் தனியாகவே விட்டுடுறதா... இனிமேல் வடசென்னைக்கே போகப்படாது காலேஜுக்குக் கூட டாடியை ஸ்கூட்டர்லதான் கொண்டு போய் விடச் சொல்லணும். இல்லன்னா லூனா வாங்கித் தரட்டும்.”

வேதாவுக்கு தாகம் எடுத்தது. உச்சிவெயில், உள்ளங்கால்களைக்கூடத் துளை போட்டது. தலை சுற்றியது. கீழே விழப்போவது போன்ற மயக்கம். பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் பார்த்துவிட்டுத்தான் உடல் சாய்க்க வேண்டும் என்ற உறுதி.

இடையிடையே இளைப்பாறாமலே, எந்தப் பக்கமும் கண்களைத் திருப்பாமலே, வேதா நடந்து நடந்து, வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/56&oldid=1388398" இலிருந்து மீள்விக்கப்பட்டது