பக்கம்:இன்னொரு உரிமை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெட்டி மனிதர்கள் 51

பலர் வந்தது தெரியாமலே வந்துவிட்டார்கள், மூன்று இளம்பெண்கள் நான்கு தடுத்தர வயதுப் பெண்கள். இளம் பெண்களின் சேலைகள், மரப்பட்டைகள் போல் மங்கிப் போயிருந்தன. ஒருத்தி கொடுத்து வைத்தவளாக இருக்க வேண்டும். இல்லையானால், இரண்டு சேலைகளைச் சேர்த்துக் கட்டியிருக்கமாட்டாள். ஒன்றின் ஓட்டையை, இன்னொன்று அடைத்து நிற்க, அவள் அடைக்கமுடியாத கண்களால் வெளியே எட்டிப் பார்த்தாள். ‘பனி இன்னும் கொட்டுதேன்’னு சொல்லப் போனவள், பசிக் கொட்டத்தில், அது ஒரு கொட்டே இல்லை என்று நினைத்தவள் போல் பேசாதிருந்தாள். ஒரு சில பெண்களின் தலையோரங்கள், காய்ந்துபோன அருகம்புல் போல் பழுத்துக் கிடந்தன. ஒரே ஒருத்தி மட்டும், ‘கிடாயில்’ துடித்த கடலெண்ணெய்யை சற்றுக்கோதி, உடம்பெங்கும் தேய்த்துக் கொண்டாள். பூச்சி புழுக்கள் கடிக்காது. ஆடவர்கள். கதகதப்பாக, பாய்லர் பக்கம் போய் நின்றுகொண்டார்கள். மகாத்மா காந்தி எப்படி இருந்தார் என்பது தெரியாமலே, அவரைப் போல் ஆடை அணிபவர்கள். அவருக்காவது, தோளில் போர்வை மாதிரி துண்டு. இவர்களுக்கு, கோவணம் மாதிரி; கோவணம் துண்டாவதும், துண்டு கோவணமாவதும், இவர்களுக்கு, மலையில் ஏறுவது—இறங்குவது மாதிரி,

சிதம்பரம், ஒவ்வொருவருக்கும் ‘டீ’ போட்டுக் கொடுத்தான். ஆளுக்கொரு மசால் வடையை நீட்டினான். சிலர் காக கொடுத்தார்கள். சிலர் கண்களால் கடன் சொன்னார்கள். ஆடவரில் ஒருவர் ‘ரெண்டு தோச போடு சிதம்பரம்’ என்று ‘தையலையை’ சிதம்பரம் எடுக்கப் போனபோது, இன்னொருவர். “டேய், மலைக்குப் போயிட்டுவந்து அரக் இலோ அரிசியும், கால் கிலோ ஆட்டுக் கறியும் வாங்கி, குழந்தை குட்டியோட தின்னேண்டா! அனாவசியமா காச கரியாக்குறான்” என்றார். மெளனப் பூனைக்கு. அவர் மணி கட்டிவிட்டதால், பலர் சேர்ந்தும் தனித்தனியாகவும் பேசினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/60&oldid=1388419" இலிருந்து மீள்விக்கப்பட்டது