பக்கம்:இன்னொரு உரிமை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெட்டி மனிதர்கள் 57


அவனுக்குப் பெரிய உபசாரம் செய்தது மாதிரிப் பார்த்தார். சிதம்பரம் தோசை சாப்பிட மனமிருந்தும், பணமிருந்தும் சாப்பிடாமல் 'வெட்டி’யாய்ப் போன விறகு வெட்டியை தன்னையறியாமலே நினைத்துப் பார்த்தான். அந்த நினைவு அந்த அதிகாரி மீதிருந்த பயவுணர்வை துரத்தியது. எத்தனை நாளைக்கி இப்படி ஒசியில கலர் குடித்து, அதுவும் ஒரு நாளைக்கு ரெண்டு தடவ. காட்ல முயல் கறியோட சாராயம் குடிக்கையில அஞ்சாறு சோடா அவுட்டாவுது. ஒசிக்கும் ஒரு லிமிட் வேண்டாமா. சரி, காலி பாட்டலுவள யாவது சீக்கிரமா கொண்டுவந்து குடுக்கானா...

சிதம்பரம் தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு காசு கேட்கப் போனான். இதற்குள் அந்த அரசுப் பிரதிநிதி 'டேய்' ஒன் கடையில, சந்தனக் கட்டைங்கள குப்பன் கொண்டுவந்து அடுக்கி வைக்கதா கேள்விப்பட்டேன். நல்லா இல்ல! அவ்வளவுதான் சொல்லுவேன். ஜாக்கிரதை, அப்புறம் எங்க ஆபீசரு கேம்ப் வாரார். வந்தார்னா ஜீப்ப அனுப்புறேன். பத்து கலர் பாட்டலையும் ஆறேழு சோடா பாட்லயும் போடு, எவனையும் அண்டவிடாத விறகுக் கட்டை எவனாவது போடுறான்னா... முடியாதுன்னு சொல்லிடு... ஏன்னா உள்ள சந்தனக் கட்ட இருக்கலாம். அப்புறம் ஒனக்குத்தான் காப்பு கிடைக்கும். சந்தனத்தை அரைக்கதுமாதிரி அரச்சுடுவோம்.

சிதம்பரத்திற்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு தடவை ஒரு சின்னஞ்சிறு சந்தனக்கட்டையை, வீட்டில் பெரியாளான மகளுக்காகக் கொண்டுவந்த ஒரு விறகு வெட்டிக் கிழவனை, இந்த அதிகாரி அடித்த அடி பார்த்த இவனுக்கே வலித்தது. அதிகாரி அனாவசியமாக நீட்டிய பாட்டலை பயத்தோடு வாங்கிக்கொண்டு சிதம்பரம் பாய்லருக்கருகே போனான். எவன் சந்தனக் கட்டையைக் கொண்டுவந்தான். யாருமே கொண்டு வந்ததா தெரியலியே... எதுக்கும் ஜாக்கிரதயா இருக்கணும். கேக்கிறபோதல்லாம் கலர் கொடுக்கணும். காலிபாட்லகூட நாமா கேக்கப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/66&oldid=1368781" இலிருந்து மீள்விக்கப்பட்டது