பக்கம்:இன்னொரு உரிமை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 சு. சமுத்திரம்


இருந்தன. சிதம்பரத்தின் தம்பி, படுத்த படுக்கையாகக் கிடக்கிறான். எத்தனை நாளைக்கு வெறும் டீயையும் மசால் வடையையும் மட்டும் சாப்பிடுவது. சிதம்பரம், கடையை விற்கப் பார்த்தான். ஆளில்லை. செட்டியார் வீட்டுக்கும் போய்ப் பார்த்தான். வேலையில்லை.

அன்று எப்படியோ கஷ்டப்பட்டு தோசை போட்டிருந்தான். பகல் பதினொரு மணி. விறகுக்கட்டுக்கள் வெளியேவும், அதைச் சுமந்தவர்கள், கடைக்குள்ளும் இருந்தார்கள். மனது பொறுக்காத ஒருவர் சிதம்பரத்தின் நிலையை அறிந்த ஆத்திரத்தில் 'ஒனக்கு முன்னால... கடை வச்சிருந்தவன், ஒசித் தோச கொடுத்து, காட்ல பாதிய அமுக்கி, கள்ளச்சாராயம் வடிச்சு, இப்போ பங்களா கட்டிட்டான்! நீ என்னடான்னா, இருக்கிற கடையைக் கூட தேய்ச்சுப்புட்ட!' என்றார்.

சிதம்பரம் எதுவும் பேசவில்லை. கலர் பாட்டில்கள் இருந்த 'ரேயை'. வெறுமயாகப் பார்த்துக்கொண்டான். கடைக்குள்ளே கனல் கக்கப் பிதற்றிக்கொண்டிருந்த தம்பியை நிமிடத்திற்கு நிமிடம் நோட்டம் விட்டுக் கொண்டே பாய்லர் பக்கம் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றான். ஜீப்பில் போன கலர் பாட்டல்கள் இன்னும் திரும்பவில்லை. ஒரு தடவை கேட்டதுக்கு 'எந்த இடத்துல எதக் கேக்கணுமுன்னு இல்லியா! இரு! இரு' என்று எச்சரிக்கை.

திடீரென்று காட்டிலாகா அதிகாரியும், போலீஸ்காரரும், ஒரு பத்து வயதுச் சிறுவனை, அவன் கைகள் பின்னால் வளைக்கப்பட்டு ஒரு காட்டுக்கொடியில் கட்டப்பட்டிருக்க அவனை பிடறியில் அடித்துக்கொண்டே கொண்டு வந்தார்கள். சிறுவன் இடறி விழுந்தான். பிறகு கட்டையில் மோதி, அவன் நெற்றியில் காயம். யாரோ ஒருவர் தூக்கி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/69&oldid=1368932" இலிருந்து மீள்விக்கப்பட்டது