பக்கம்:இன்னொரு உரிமை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 சு. சமுத்திரம்



"டேய்... அவங்களை நீ காப்பாத்தலாம். ஒன்னை யாருடா காப்பாத்துறது" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். வண்டிக்கு முன்னால் போக்குவரத்துப் போலீஸ்காரர்.

லிங்கையா வெலவெலத்தான். அவரோ, "உன் பேரு என்னய்யா. எத்தனை வருஷமாய் வண்டி ஒட்டுறே? எத்தனை தடவை கோர்ட்ல அபராதம் கட்டியிருக்கே? சொல்லுடா எல்போர்டு !"

"ஸார்! மொதல்ல இவங்களை ஆஸ்பத்திரியில சேர்க்கணும். வாதையில் துடிக்கிறதைப் பாருங்க."

"அது எனக்குத் தெரியும். அடிபட்டவங்களைக் கவனிக்காமல் அடித்தவனைக் கவனிக்கறதுதான் போலீஸ்டுட்டி. புரியுதா! இந்தாங்கம்மா ஒங்க பேரு என்னம்மா?’’

அவள் தயங்கினாள். கான்ஸ்டபிள் முகம் கடுக்கக்கேட்டார்.

"என்னோட டுட்டியைச் செய்யவிடுங்கம்மா! உங்க பேரு என்னம்மா? அட்ரஸ் என்னம்மா?’’

"என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க."

"அவங்களைக் கூட்டிவரத்தான் கேக்கேன்!"

"தெரேஸா... சிவாஜி நகர்ல."

லிங்கையா கான்ஸ்டபிளைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

"ஸார் ஏற்கனவே ஒரு கேஸ் இருக்குது ஸார்! குடித்து விட்டு மோட்டார் பைக்குல வந்த ஒருத்தன் என் கார்லே மோதித் தன்னோட கையை முறிச்சுக்கிட்டான். போலீஸ் என்மேலேயே கேஸ் போட்டிருக்கு! இந்தக் கேஸாம் சேர்ந்தால் வேற வினையே வேண்டாம். கோர்ட் மன்னிச்சாலும் என்னோட டிபார்ட்மெண்ட்லே மன்னிக்காது ஸார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/77&oldid=1369000" இலிருந்து மீள்விக்கப்பட்டது