பக்கம்:இன்னொரு உரிமை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களுர் தெரஸா 69

 நான் கார் தொழிலாளி, நீங்க போலீஸ் தொழிலாளி. நீங்களும் ஏழை, நானும் ஏழை. ஏழைக்கு ஏழை உதவா விட்டால் வேற யார் ஸார் உதவுவாங்க?"

கான்ஸ்டபிள் டிரைவர் லிங்கையாவை ஏடாகோடமாய்ப் பார்க்கத் துவங்கி இறுதியில் அந்தப் பார்வையை இரக்கத்தோடு முடித்தார்.

"இந்தா பாருப்பா! உன்னைக் காப்பாத்தறதுக்காக என்னைச் சாகடிச்சுக்க முடியாது. ஆனாலும் மனசு கேட்கலை. உன்னோட வேலையில் கோளாறு பண்ண விரும்பல. அதனால இந்தம்மாவை உடனடியாய் ஏதாவது நிர்ஸிங் ஹோம்லே சேர்த்துடு. ஆக்ஸிடெண்டுன்னு சொல்லாதே! எடுத்துக்கமாட்டாங்க! ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாதே! போலீஸுக்குப் போன் போடுவாங்க!"

லிங்கையா, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே, காருக்குள் வந்தான். வலதுகாலைக் குறுக்காய் மடிக்க முடியாமல் அல்லாடிய தெரேஸாவை, நேருக்கு நேராய்ப் பார்க்க முடியாமல், அவன் சாய்வாய்ப் பார்த்தான். ஒரு வார்த்தைகூட 'அடப்பாவி, இப்படிச் செய்திட்டியேடா’ என்று சொல்லாத அவளை அதிசயித்துப் பார்த்தான். அவளோ, "என் பிள்ளிங்க... என் பிள்ளிங்களைப் பார்க்கணும். அங்கே கொண்டு போப்பா! அய்யோ என்ன மாய் வலிக்குது. என் பிள்ளிங்க!" என்று அரற்றினாள். லிங்கையா நினைத்ததைத்தான் சொன்னான்.

"நானும் உனக்குப் பிள்ளைதாம்மா!"

அவனைப் பார்த்த அவள் கண்களில் ஒரு மின் வெட்டு: உயரமாகிக் கொண்குருந்த உதட்டோரம் ஒரு புன்னகை. வலியை மறைக்கும் வலிய வந்த குறுநகை.

லிங்கையா நீர் கொண்ட கண்களோடு வண்டியை பலமாக இயக்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/78&oldid=1368856" இலிருந்து மீள்விக்கப்பட்டது