பக்கம்:இன்னொரு உரிமை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 சு. சமுத்திரம்


வழியில் முதலில் தோன்றிய பிரம்மாண்டமான அந்த நர்ஸிங் ஹோமின் முன்னால் வண்டியை நிறுத்தினான்" அதன் போர்ட்டிக்கோவே. இரும்புத் தூண்களும் யந்திர வாகனங்களுமாய் பெரிய அரண்மனைபோலத் தோன்றியது.

லிங்கையா, கைத் தாங்கலாகக் கொண்டுவந்த தெரேலாவைப் பார்த்த டெலிபோன் மங்கை 'இவளுக்கென்ன இங்கே வேலை' என்பதுமாதிரி பக்கத்தில் நின்ற ஒருத்தியின் இடுப்பைக் கிள்ளி அவர்களைச் சுட்டிக்காட்டினாள். இந்தச் சமயத்தில் ஒரு டாக்டர் அந்தப் பக்கமாய் வந்தார். லிங்கையாவை அதட்டிக் கேட்டார்.

"ஒ ஆக்ஸிடெண்ட் கேஸா? கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போ! போலீஸோடு நாங்க மாரடிச்சது போதும். உம், சீக்கிரமாய் போப்பா!"

லிங்கையாவுக்கு நாடி நரம்புகள் அடங்கிப்போயின. கடைசியில் போலீஸ் கேஸ்தானா? வேலை பறிபோய். வீதியில் நிற்க வேண்டியதுதானா? அந்த அம்மா அவன் தோளோடு தோளாய் நிற்க முடியாமல் ஊசலாடினாள். "வலிக்குதே, வலிக்குதே" என்று வேதனையோடு கத்தினாள் லிங்கையாவின் மனத்தில் ஒர் உத்தி.

இப்போது இந்த அம்மாவைக் குணப்படுத்த வேண்டியது தான் முக்கியமே தவிர வேலையில்லை போலீஸ் கேஸானாலும் பரவாயில்லை என்பதுபோல் அவளை மார்போடு மார்பாய்ச் சுமந்து கார்ப் பக்கம் போனபோது அவர்களை வினோதமாய் பார்த்தபடியே ஒரு வார்ட்பாய் எதிர்த் திசையில் இருந்து வந்தான். லிங்கையாவுக்கு ஒரு நைப்பாசை. கேட்டுவிட்டான்.

"இந்த அம்மா என் காரில் அடிபட்டுட்டாங்க! நீதான் இவங்களை எப்படியாவது இங்கே சேர்க்கணும் தம்பி!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/79&oldid=1369014" இலிருந்து மீள்விக்கப்பட்டது