பக்கம்:இன்னொரு உரிமை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 85


கொஞ்ச நேரம் "அய்யா அய்யா" என்று அழுத வைரமணி, "நீயில்லாம்... ஒரு பொம்பிளையா... செத்துப் போயிருக்காரு. அதக்கூட அக்கம்பக்கம் சொல்லணுமுன்னு தெரியலியா? நீயும் அவரோடப் போயிடு" என்று சொல்லி பயங்கரமாக அடித்து, முதன் முறையாக அவளைத் 'தொட்டபோது' தம்பிக்காரன் அவனைப் பிடித்துக்கொண்டான். பிறகு மயினிக்காரியைக் கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தான். மரியா தியா ஒப்பன் வீட்டப் பாத்துப் போயிடு. நீ இங்க... ஆவாது என்று சொல்லிவிட்டு, ஒரு பையனிடம் கையில் பத்து ரூபாயைக் கொடுத்து. லிங்கம்மாவை பிறந்த வீட்டில் கொண்டு போய் விட்டுவிடும் படிச் சொல்லிவிட்டான்.

போகிறோமே என்று வருத்தப்படாமலும், போகச் சொல்லி விட்டதற்காகச் சந்தோஷப்படாமலும் லிங்கம்மா பஸ் ஏறினாள். ஒருவேளை, அவள் மனதுக்குள் ஏதேனும் நடந்து கொண்டிருந்ததோ... என்னவோ?

வைரமணி மீண்டும் வயல் வரப்புக்குப் போகத் துவங்கியபோது, அவன் அம்மாக்காரி கிட்டத்தட்ட படுத்த படுக்கையாகிவிட்டாள். இதுவரை 'ரெண்டாவது கல்யாணம் நம்ம குடும்பத்து பழக்கமல்ல' என்று வாதாடியவள். "நொண்டியோ... மூக்கரையோ... நம்மள சதமுன்னு வந்ததை நாம தள்ளி வைக்கலாமாய்யா?" என்று எதிர்க் கேள்வி கேட்பவள், இப்போது "நான் கண்ண மூடுமுன்ன நீ ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்றதப் பாக்கணும்" என்று அடிக்கடி சொன்னாள்.

வைரமணிக்கும் அம்மா சொல்வது நியாயமாகவே பட்டது. 'அம்மா பிழைக்கணுமுன்னா நாம ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்' என்று அவன் புறமனம், அடிமன அபிலாஷையை நாகரிகமாக வெளிப்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/94&oldid=1369384" இலிருந்து மீள்விக்கப்பட்டது