பக்கம்:இலக்கண வரலாறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது.

“குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம்” என்பவர் “அருக கோட்டம் அருகக்கோட்டம்” எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல, காட்டியமையால் அச் சார்பினர் என்பதும் ஆகாதாம். எடுத்துக்கொண்ட பொருளுக்கு எடுத்துக்காட்டுப் பொருத்துவதா என்பதே உரை நோக்கு.

குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ‘ஆசீவகப்பள்ளி’ என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக்கோட்டம் காட்டாமையால் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசிவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக்கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் பொருளில என்க.

இனி ‘இளம்பூரணர்’ என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகலின் சைவர் என்பர். ‘இளையாய்’ என்பதிலும் ‘இளம்’ என்பதிலும் கண்ட சொல்லொப்புமையன்றிப் பொருளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு.

“ஆறு குடி நீறு பூசி
ஏறும் ஏறும் இறைவனைக்
கூறு கெஞ்சே குறையிலை நினக்கே”

என்பதை ‘இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறுபாடல்’ எனக் கூறிச், சைவராக்கினால், அடுத்தாற் போலவே, (தொ. பொ. 359)

“போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதர்ச் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே”

என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/118&oldid=1471297" இலிருந்து மீள்விக்கப்பட்டது