பக்கம்:இலக்கண வரலாறு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம் துளுவம் குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள் கடைச்சங்க காலத்தில் அதாவது கி. பி. 300க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும் தமிழ்மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில் கி. பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே இந்நிலங்களைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால் இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர் கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல் வேண்டும்; அல்லது அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த ஒருவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும்.

மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ் திரித்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவநாடு. அதாவது பல்லவ அரசர்கள் அரசாண்ட நாடு. அது தொண்டை நாடு என்றும், தொண்ட மண்டலம் என்றும் அருவாநாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம் பல்லவ நாட்டைத் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது... இவற்றையெல்லாம் ஆராயும்போது இந்த அகத்தியச் சூத்திரம் போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டியிருக்கிறது.

மேலும் கூறுகிறார்: பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் அகத்தியர் செய்யுளில் ஆனந்தக் குற்றம் என்னும் இலக்கணத்தைக் கூறவில்லை என்று எழுதுகிறார்கள். யாப்பருங்கல உரையாசிரியர் அகத்தியர் ‘ஆனந்த ஓத்து’ என்னும் இலக்கணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/77&oldid=1471382" இலிருந்து மீள்விக்கப்பட்டது