பக்கம்:இலக்கண வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன.

“தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்றும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில” வழங்குகின்றன.

“தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக” வழங்கப்பட்டுள்ளது.

வியங்கோள்வினை முன்னிலையிலும் தன்மையிலும் வாராது, என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக் கூடியது.

“கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளன. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் அறிய வருகின்றன.

“சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் கட்டாயம்சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்த சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/84&oldid=1471393" இலிருந்து மீள்விக்கப்பட்டது