பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 105



மாண்பிலார் போல் பழியுடையனாவேன், நடுநிலை தவறாது, காய்தல், உவத்தல் அகற்றி, குறை கூறியும் முறை வேண்டியும் வருவார் கூறுவன கேட்டு, அறம் வழங்கும் என் அறங்கூர் மன்றத்தே, அவ்வியல்பற்றான் ஒருவனை வைத்து, அமைதியைக் குலைத்த கொடுங் கோலன் எனக் குடிவாழ்வார் தூற்றும் பழியுடைய னாவேன்! மாவன், ஆந்தை, அந்துவன்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் போன்ற என் நண்பர்களைஇதுகாறும் என் கண்கள் போல் கருதிக் காத்துவந்த என் நண்பர்களை- இழந்து, நட்பாடல் தேற்றா நயமிலி என நாட்டவர் கூறும் பழியுடையனாவேன். உலகெலாம் போற்ற ஊராளும் உயர்ந்த புகழ் வாய்ந்த பாண்டியர் குடியில் பிறக்கும் பெருமை இழந்து, வாழ்வும் வளமும் வனப்பும் அற்று, வறுமையும், வாட்டமும் விளங்கும் வன்னிலத்தே வறிதே ஆண்டு கிடக்கும் ஆண்மையற்றார் குடியிற் பிறந்து, பிறந்த குடியாலும் பழியுடையனாவேன்!” இவ்வாறு ஒல்லையூர் தந்தான் அன்று வஞ்சினம் உரைத்தான். அக்கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுப் படிப்போர்க்குப் பெருவீரத்தை ஊட்டுகின்றது.