பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 113



அச்சம் ஒழிந்து உறங்கியதையும், அவ்வாறு உறங்கும் மானினங்களுக்கு அத்தீயால் ஊறு ஒன்றும் இலதாகவும், தீங்கு வந்துறுமோ என அஞ்சிய மந்திகள் அத்தீயை அழித்ததையும் கண்டு மகிழ்ந்தவர் புலவர். அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், தீப்பாய்வான் எண்ணி ஆங்கு மெல்ல அடியிட்டு வரும் பெருங்கோப் பெண்டினைக் கண்டார்; அவர் கலக்கம் பெரிதாயிற்று. மானினம் பிழைக்க, மந்திகள் நெருப்பழித்த நிகழ்ச்சியை நினைந்தார். மந்தி செய்ததைத் தம்மால் செய்ய முடியவில்லையே, அரசமாதேவி உயிரிழப்பதை உணர்விழந்து பார்த்திருப்பதல்லது, தடுத்து நிறுத்த இயலவில்லையே என எண்ணி எண்ணித் துயர் உற்றார். அந்நிலையில், பூதப்பாண்டியன் இறந்தமை யால் அரசிழந்து அல்லல் உறும் பாண்டி நாட்டு மக்களின் அவல நிலை அவர் நெஞ்சில் நிறைந்தது. உடனே, தீயில் குதிக்கத் துணிந்து நிற்கும் பெருங்கோப் பெண்டின் அண்மையிற் சென்றார். நாட்டின் நிலையினை எடுத்துக் காட்டிக் கடமைக்காகக் கணவனைப் பிரிந்து வாழ்தலும் ஒரு வகையில் கவின் உடையதே என மெல்ல எடுத்துரைத்தார்.

புலவர் கூறுவனவற்றைக் கேட்டாள், பெருங் கோப்பெண்டு. அந்நிலையே பெருங்கோபம் உற்றாள். “இறந்த கணவனோடு பிரிந்து போகும் உயிர் உடையவரே கற்புடையராவர்; அவ்வாய்ப்பு வாய்க்கப் பெறாதார், தம் உயிரை யாதானும் ஒருவகையில் விடுத்து உயர்ந்து அக்கற்பு நெறியில் நிற்றல் வேண்டும் என