பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 புலவர் கா. கோவிந்தன்



உணர்த்தும் சொற்களை வரையறுத்துள்ளது. பிடி, பெடை, பெட்டை போலும் சொற்கள் பெண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே பெண்மைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்று கூறுகின்றது. இவற்றோடு அமையாது,

     “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”

என இளமை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் இளமைகளை உணர்த்தும் என்றும் குறித்துள்ளது.

     “பன்றி, புல்வாய், உழையே, கவரி
      என்றிவை நான்கும் ஏறெனற்குரிய”

என ஆண்மை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் ஆண்மைகளை உணர்த்தும் என்று உரைக்கின்றது.

     “பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே”

எனப் பெண்மை உணர்த்தும் பெயர்களுள் இன்னபெயர், இன்னின்ன உயிர்களின் பெண்மைகளை உணர்த்தும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு பொருள் களுக்கும், சொற்களுக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து தொல்காப்பியம் வரையறுத்து வழங்கி யுள்ளது.

அம்மட்டோ! தொல்காப்பியம் மலை, காடு, வயல், கடல் என நால்வகைப்படும் நிலத்தின் இயல்பை அறிவிக்கின்றது. ஞாயிற்றின் வெங்கதிர், வானின்