பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 புலவர் கா. கோவிந்தன்



புகழ் பெற்ற தொடித்தோட் செம்பியனை முன்னோ னாகக் கொண்டது. ஆதலின் வெற்றி சோழர் பண்பு. ஆகவே வெற்றி வீரனாவதில் உனக்குத் தனிப் புகழில்லை.

“கிள்ளி! முறை வேண்டினார்க்கும், குறை வேண்டினார்க்கும் அரச மன்றத்தில் நீ சான்றோரோடு காண்டற் கெளியனாய் இருந்து முறை செய்வாய் எனக் கூறுகின்றனர். இதனாலும் உனக்குப் புகழில்லை. உன் தலை நகராகிய உறையூர்க்கண் அமைந்துள்ள அவையில் அறம் என்றும் நின்று நிலை பெற்றிருக்கும் என்ப. ஆகவே அறங் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம். ஆதலின் அதிலும் உனக்குப் புகழில்லை.”

மேற்கூறியவாறு மாறோக்கத்து நப்பசலையார் சோழர்குடி இயல்பாகவே சிறந்தது, கொடையிற் புகழ் பெற்றது, அறத்தில் நின்றது என்று அவன் குடிப்புகழ் போற்றினார்.

புகழ் மிக்க மன்னனாய்த் திகழ்ந்த கிள்ளி வளவன் புலவர் பலர் சூழ வாழும் நல்வாய்ப்புப் பெற்றிருந்தான். எனவே, அவனும் ஒரு புலவனாய் விளங்கியதில் வியப்பொன்று மில்லையன்றோ கிள்ளி வளவன் பண்ணன் என்பானைப் பற்றிப் பாடிய பாடல் மிகவும் சுவையுடையதாகும்.

பண்ணன் என்பான் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்று புலவர் பாராட்ட வாழ்ந்தவன். புலவர் பலரின் பாராட்டைப் பெற்ற கிள்ளி வளவனே இவனைப் பாராட்டினான் எனில் இவன் பெருமைக்கோர் எல்லையுண்டோ? பண்ணன்