பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 119


பேராண்மையும், பெருங்கொடையும் உடையவன். சோழ நாட்டில் காவிரிக் கரையிலிருந்த சிறுகுடி என்னும் சிறந்த ஊரின் தலைவன். வள்ளல் ஒருவன் சிறப்பினை அவன்பால் பரிசில் பெறும் புலவர் பாடுவதிலும், அவனைப் போன்ற பிறிதொரு வள்ளல் பாராட்டுவதே உண்மைச் சிறப்பாகும். அத்தகைய பெருஞ் சிறப்புடையவன் பண்ணன். பெருங்கொடை வள்ளல் தலைவனாகிய கிள்ளி வளவன் பண்ணனைப் பாராட்டியுள்ளான்.

பண்ணன்பால் பரிசில் பெறக் கருதிய பாணன் ஒருவன், அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கின்றான். பண்ணன்பால் பரிசில் பெற்ற இளைஞரும் முதியவருமாய பாணர்கள் வேறு வேறு திசை நோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்றனர். இக்காட்சியைப் பாணன் காண்கின்றான். பழுமரம் ஒன்றில் பழம் உண்ணுவதற்கு வந்து கூடிநிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலிபோல் பண்ணன் அறச்சாலையில் உணவு பெறுவோர் எழுப்பும் ப்ேரொலி கேட்கலாயிற்று. அவன் சிறுகுடி அண்மையில் உள்ளது என்பதனை அஃது உணர்த்தியது. பாணனும் சிறுகுடி அண்மையில் உள்ளதை உணர்ந்தான்; உணர்ந்த பின்னும், தன் பசிக்கொடுமையால், “பண்ணன் சிறுகுடி யாண்டுளது? பண்ணன் சிறுகுடி யாண்டுள்ளது?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தான். பரிசில் பெற்றுத் திரும்பும் பாணர் சிலரை நெருங்கி, “ஐய, பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் யாண்டுள்ளது? அண்மையிலா? சேய்மையிலா?” என்று