பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-39-

தாய்நாட்டைப்‌ பற்றியும்‌ கவலைப்‌ படாதவர்களாகவே இருத்தல்‌ வேண்டும்‌. இனி, அவர்கள்‌ பெற்ற தாயையும்‌ கூடப்‌ புறக்கணிப்பவராக விருக்கலாம்‌. அத்‌ தகவிலாதார்‌ எந்த ஆக்கநிலையைப்‌ பற்றியும்‌ கவலை யில்லாதவர்களே. எனவே அவர்களைப்‌ பற்றி நாமும்‌ கவலை கொள்ளத்‌ தேவையில்லை.

21 :0 முடிவுரை

21 : 1 இதுகாறுங்‌ கூறியவற்றால்‌, மொழியின்றி இலக்கியம்‌ இயங்காது என்றும்‌, நம்‌ தமிழ்‌ மொழிச்‌ சிறப்பும்‌ இலக்கியச்‌ சிறப்பும்‌ மிகவும்‌ செழுமை வாய்ந்தன என்றும்‌, இன வீழ்ச்சியால்‌ மொழி வீழ்ச்சியுறும்‌ என்றும்‌, மொழி வீழ்ச்சி இலக்கிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்‌ என்றும்‌, கலப்பு நிலையே மொழிச்‌ சிதைவை உண்டாக்கி இலக்கிய வளர்ச்சிக்குக்‌ கேடு செய்யும்‌ என்றும்‌, எனவே அது தவிர்க்கப்‌ பெற்றாலொழிய மொழி வளர்ச்சியுறாது என்றும்‌, மொழிக்‌ கலப்புப்‌ போன்றதே ஒலிக்கலப்பும்‌ என்றும்‌, அதுவும்‌ தவிர்க்கப்‌ பெறுதல்‌ வேண்டும்‌ என்றும்‌, இலக்கிய வாக்கமும்‌ மொழி வளர்ச்சியும்‌ இணைந்து நடப்பவை என்றும்‌, மொழியும்‌ கருத்தும்‌ இலக்கியத்தின்‌ இரு கரைகள்‌ என்றும்‌, இலக்கியக்‌ கட்டுக்கோப்பென்பது அதன்‌ மொழிநடையும்‌ கருத்தும்‌ செறிந்திலங்குவதென்றும்‌, இக்கால இலக்கியத்தின்‌ இழிநிலை இன்னதென்றும்‌, அந்நிலையில்‌ ஒரு மாற்றம்‌ எய்தி வருவது மனத்திற்கு ஆறுதலளிக்கிறதென்றும்‌, இனி எதிர்காலத்தில்‌ தமிழ்‌ வளர்ச்சியில்‌ எத்தகைய அக்கறை காட்டப்‌ பெறுதல்‌ வேண்டுமென்றும்‌ ஒருவாறு தெளிந்து கொண்டோம்‌. இக்‌ கருத்துரைகளே இத்துறையில்‌ முடிவானவை அல்ல. நம்‌ திறனுக்கும்‌ முயற்சிக்கும்‌ தக்கவாறு அவற்றை இன்னும்‌ விளங்க அமைத்துக்‌ கொண்டு, இவ்வகையில்‌ மேலும்‌ ஊக்கமாகவும்‌, சிறப்பாகவும்‌ செயலாற்றுதல்‌ வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டு, இக்‌ கருத்துரையை முடித்துக்‌ கொள்கின்றேன்‌.

                     ❖  ❖  ❖