பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

103


புற ஒழுக்கம் என்பது மற்றவர்களுடன் சுமுகமான உறவை கொடுத்து சுதந்திரமான உணர்வை வளர்த்து சுகமான சுற்றுப்புறச் சூழ்நிலைகளை அமைத்துத்தரும் பண்பான காரியங்களாகும்.

ஆக, சிந்தனையும் செயலும் போல, உள்ளுறுப்புக்களின் வளமும் உடல் மேலமைப்பின் அழகும் போல, அக புற ஒழுக்கங்கள் அமைந்திருக்கின்றன. நமக்கு இருகைகள் இருந்தால் அழகாக இருக்கும். ஒன்று குறைந்தாலும், ஊனம்தான், ஈனம்தான்.

அதனால்தான், தன்கை என்றதும் இருகைகள் நினைவுக்கு வருவதுபோல தன் ஒழுக்கம் என்றதும் மன ஒழுக்கமும், உடல் ஒழுக்கமும் வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

அப்படி நினைக்க வேண்டும் என்பதற்காக நாம் அன்றாடம் செய்கிற காரியங்களிலும் இந்த கை என்ற சொல்லை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

மனிதன் உயிர் வாழ்வதற்கும், உற்சாகமாக வாழ்வதற்கும் முக்கிய தேவை உணவு,உடை, உறக்கம், இயக்கம். இந்த செயல்கள் நடக்கும்போது செய்கிற சிந்தனையும் செயலும் சீராக நேராக அமையவேண்டும் என்பதற்காக, நமது முன்னோர்கள் பெய்திருக்கும் செய்திருக்கும் பெயர்களைப் பாருங்கள்.

பருக்கை, இருக்கை, உடுக்கை, படுக்கை, நடக்கை, இயற்கை, செயற்கை, யாக்கை, வாழ்க்கை.

பருக்கை: பருக்கை என்றால் சோறு என்று அர்த்தம். சோறு சாப்பிட்டவுடன் சுகமாக இருக்கும். அதனால் தான் நம்மவர்கள் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்றனர். பரு என்றால் சொர்க்கம் பருக்கை என்றால் சோறு. அளவான சோறு, ஆத்ம திருப்தியை அளிக்கிறதல்லவா.