பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

123



17. கை... கை... வாழ்க்கை



பெரிதாக வாயைப் பிளந்து, பெருஞ்சத்தமிட்டு அழுது, பிராணவாயுவைப் பெற முயற்சித்த பொழுதிலிருந்தே, வாழ்க்கை தொடங்கி விடுகிறது. தொடர்ந்து வந்த சுவாசம் தொடர முடியாமல் போனால், பூவுலக வாழ்க்கையும் பூவாய் உதிர்ந்து போகிறது.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நிகழ்ச்சிகளே வாழ்க்கையாகிறது. வாழ்க்கை என்னும் நதிக்கு பிறப்பும் இறப்பும் இரண்டுமே இரு கரைகளாக விளங்குகின்றன.


காட்டாறாக இருந்தாலும், கரைகளுக்குள்ளே பாய்ந்தோடுகிறபோதுதான் காண்பதற்கு அழகாகவும், வழிநெடுகப் பயன்படுவதாகவும் அமைகின்றது.


மனித வாழ்க்கைக்கு என்றும் ஒரு மகிமை உண்டு. ஒருவர் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அது நடக்காமல், விரும்பாதவேறொன்று நடக்கும். மகிழ்ச்சியைக் கெடுக்கும். எப்போதோ ஒருமுறை விரும்பியது நடக்கும். ஆனாலும், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.


எப்படியிருந்தாலும், ஒருவர் எப்படி வாழவேண்டும் என்ற வரைமுறையை, வாழ்வு நெறியைத்தான், வாழ்க்கை என்ற ஒரு சொல் வடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.


எல்லாவித இன்பங்களுக்கும் நிலமாய், அழகுக் களமாய் இருக்கின்ற இந்தப் பூமிக்கு வா என்று வரவேற்கிற ஒரே சொல்.