பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 வந்து நீ வாழ வேண்டும். ஆள வேண்டும் என்று வாழ்த்துவது போலவும், வற்புறுத்துவது போலவும் சொல்கிற ‘வாழ்' என்ற ஒரு சொல்.


வாழவும் ஆளவும் தெரிந்தால் மட்டும் போதாது. நீ வெற்றி பெற்றப் பேராளராக வாழ்ந்திட வேண்டும். வாழ்ந்தாக வேண்டும் என்று இலட்சிய நோக்கைக் குறிக்கும் 'வாகை’ என்ற ஒரு சொல்.


வெற்றிக்குப் பற்றுக் கோடாக, நீ கொள்ள வேண்டியது 'ஒழுக்கம்.'


அந்த ஒழுக்கமே உன்னை உயர்த்தும் என்று சொல்கிற 'கை' என்ற சொல்.


வாழ்க்கை என்ற சொல், இவ்வாறு நான்கு சொற்களாகப் பிரிந்து, மனிதர்களுக்கு வாழும் வழிகளை, வகைகளைக் கற்பித்துக் கொடுப்பதுதான், நாம் வியந்து இன்புறத்தக்க சொல்லாட்சியாகும்.


வெற்றிக்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும் அடிப்படைத் தேவை என்றுதான், 'கை' என்ற சொல்லை, இறுதியில் போட்டிருக்கின்றார்கள்.


கை என்றால் ஒழுக்கம் என்று பொருள். அதாவது மன ஒழுக்கம். உடல் ஒழுக்கம் என்று பொருள். ஒருவரின் வாழ்க்கை உயர்வுக்குப் புற ஒழுக்கமும், அக ஒழுக்கமும் உதவும் என்பதைக் குறிக்கவே. தன்கையே தனக்கு உதவி என்றார்கள் நமது முன்னோர்கள்.


ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்பார்கள் என்று தான், இயற்கை என்று கூறினார். இயல்பான ஒழுக்கத்திற்கு இதமான இயக்கத்திற்கு, கால நேரத்துடன் ஒழுகுகின்ற காரியத்திற்குப் பெயர் இயற்கை. இயற்கைதான் நமக்கெல்லாம் முன்னோடி.