பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 இந்திரியங்களை, இந்திரங்களை வென்றவன் இந்திரன் எனப்படுகிறான். அவன் வாழ்வும் அமுதம். சொல்லும் செயலும் அமுதம். அவன் சொல் கேட்டு வாழ்கிற மக்களுக்கு கிடைப்பது அமுதம். அலைக்கழிக்காத ஆனந்த வாழ்வும் அதுதான்.


அமுதம் என்றதும், பாற்கடலைக் கடைந்து எடுக்கப்பட்ட சுவையான பொருள் அது என்று கூறுவார்கள். அது அல்ல அர்த்தம். அ+முதம் அமுதமாயிற்று. முதம் என்றால் மகிழ்ச்சி என்று பொருள். 'அ' என்றால் அகமும் புறமும் ஆகும். ஆக, அமுதம் என்றால் அகமும் புறமும் நிறைந்திருக்கின்ற மகிழ்ச்சி, இதுதான் மனிதனுக்கு எப்போதும் கிடைக்காத மாபெரும் சுழற்சி.


இந்த உலகம் ஏன் நிலைத்து நிற்கிறது என்றால்,

‘1. இந்திரன் அமுதம் இயைவதாயினும் தமியராய் உண்டலும் இலர்.

2. புகழெனின் உயிரும் கொடுக்குவர்

3. பழியெனின் உலகுடன் தரினும் கொள்ளலர்’

என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று புகழ்பட விளக்கம் கொடுக்கிறது.


இங்கே இந்திரன் அமுதம் என்பது, இந்திரியங்களை அடக்கி வலிமையாளன் வல்லாளன். மோன குருவாக விளங்குகிற மகான். தன் வலிமையால் இந்திரன் ஆனவன் வழங்குகிற அருளால் கிடைக்கும் அளப்பரிய ஆனந்தமே, பெறற்கரிய பேரின்பம்.

இப்படிப்பட்ட இன்பத்தைத்தான் பகிர்ந்து கொண்டு. பரம சுகம் பெற வேண்டும் என்ற நிலையைத்தான், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று அன்றே பாடி வைத்தனர்.